முன்னாள் நியமன எம்.பி. ஸ்ரீநிவாஸ் ராய் காலமானார்

2 mins read
ecdbe645-73e4-41af-a018-18953018d7c4
1997 நவம்பர் 4ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில், திரு ஸ்ரீநிவாஸ் ராய். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய சமூகத் தலைவர்களில் ஒருவருமான திரு ஸ்ரீநிவாஸ் ராய் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) காலமானார். அவருக்கு வயது 83.

வழக்கறிஞரான அவர், 1997 அக்டோபர் 1ஆம் தேதி பதவியேற்ற ஒன்பது நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவார். 1997 ஜூலையில் சிங்கப்பூர் அரசியலமைப்பின் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது நாடாளுமன்றத்தில் நியமன உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆறிலிருந்து ஒன்பதாக உயர்த்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் பரந்த அளவிலான சமூகக் கருத்துகளைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்த மாற்றம் செய்யப்பட்டது.

1997 அக்டோபர் 1ஆம் தேதி நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் ஸ்ரீநிவாஸ் ராய்.
1997 அக்டோபர் 1ஆம் தேதி நியமன நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும் ஸ்ரீநிவாஸ் ராய். - படம்: சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம்

மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க விரும்பியதால் தமக்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் ஒரு தவணைக்காலம் மட்டுமே போதும் என திரு ஸ்ரீநிவாஸ் கருதியிருந்தார்.

சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் முக்கிய நபர்களில் ஒருவரான அவர், இந்து அறக்கட்டளை வாரியம் போன்ற அமைப்புகளில் செயலாற்றியதற்காக பரவலாக அறியப்பட்டார். மகாத்மா காந்தி நினைவிடத்தை வழிநடத்தியது உட்பட கலாசார, சமூகத் தலைமைத்துவத்துக்கு ஆற்றிய பணிகளுக்காக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

திரு ஸ்ரீநிவாஸ், இந்தி மொழிச் சங்கத்தில் (சிங்கப்பூர்) தனது ஈடுபாட்டிற்காகவும் நன்கு அறியப்பட்டவர். சங்கத்தின் அறங்காவலராக அவர், திரு கைலாஷ் நாத் ராய் போன்ற தலைவர்களுடன் இணைந்து தாய்மொழியாக இந்தி மொழிக் கல்வியை மேம்படுத்த பெரிதும் உதவினார்.

மனைவி ரத்னேஸ்வரி தேவி, பிள்ளைகள் சதீஷ் ராய், சுசித்ரா ராய், பேரப்பிள்ளை திஷானி ராய் ஜெயின் ஆகியோரை திரு ஸ்ரீநிவாஸ் விட்டுச்செல்கிறார்.

உட்லண்ட்ஸ் மெமோரியல் ஜார்விஸ் ஹால், 6ஆம் தளத்தில் திரு ஸ்ரீநிவாசின் நல்லுடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜனவரி 19) மாலை 5.45 மணியளவில் அவரது நல்லுடல் அங்கிருந்து மண்டாய் தகனச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு மாலை 6.45 மணியளவில் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரு ஸ்ரீநிவாஸ் ராயின் மரண அறிவிப்பு.
திரு ஸ்ரீநிவாஸ் ராயின் மரண அறிவிப்பு. - படம்: சுசித்ரா ராய்
குறிப்புச் சொற்கள்