சிங்கப்பூர் தேசியப் பல் சிகிச்சை நிலையத்தில் (NDCS) பணியாற்றிய புகைப்படக்காரருக்கு, தன்னைக் கவர்ந்த பல பெண்களைத் தகாத முறையில் புகைப்படமெடுத்த குற்றத்துக்காக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) இரண்டு ஆண்டு, மூன்று மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இலேய்ன் இங் என்ற அந்த 29 வயது ஆடவர் அங்கு தற்போது பணியில் இல்லை. அவர் 600க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துள்ளார். அதனால் 25 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில படங்களை அவர் நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டது தெரியவந்துள்ளது.
அவர்மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வேறு 21 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில்கொள்ளப்பட்டன.
தண்டனைக்கு முன்பு நடந்த விசாரணையில், அரசாங்கத் துணை வழக்கறிஞர் ஜெரமி பின், தேசியப் பல்சிகிச்சை நிலைய புகைப்படக்காரராகக் குற்றவாளி அறுவை சிகிச்சைக்கு வரக்கூடியவர்களின் முகம், தாடை, பற்களைப் படமெடுக்கும் பணியை வழக்கமாகச் செய்யவேண்டும் என்று விளக்கினார்.
அதோடு ஆண், பெண் இருபாலரும் நெஞ்சுப் பகுதியை மறைத்துக்கொள்ளும் நீல நிற அட்டையை புகைப்படக்காரர் வழங்க வேண்டும். பெண்களைப் படமெடுக்கும்போது துணைக்கு மற்றொரு சக பெண் ஊழியர் உடன் இருப்பது அவசியம் அல்லது அங்கிருக்கும் அறையின் திரைத்துணிகள் திறந்த நிலையில் இருக்கவேண்டும்.
ஆனால், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, 2024ஆம் ஆண்டு மே மாதம் வரையில் சிகிச்சைக்கு வந்திருந்த பெண்களை இலேய்ன் சக பெண் ஊழியர் அறையில் உடன் இல்லாமலேயே முறையற்ற வகையில் புகைப்படம் எடுத்துள்ளார்.
பிறகு, கேமராவில் இருந்த படங்களை பல் மருத்துவர்களுக்கு நடைமுறைப்படி அனுப்பிவிட்டு, தேர்ந்தெடுத்த படங்களை அவர் சொந்த பயன்பாட்டிற்கு ரகசியமாகப் பதிவிறக்கம் செய்துள்ளார்.
சில நேரங்களில் தேவையில்லாமல் பெண்களை வரவழைத்து கூடுதல் படங்கள் தேவை என்று கூறி நெஞ்சுப் பகுதியை மறைக்கும் நீல அட்டையை வழங்காமல் படங்களை எடுத்துள்ளார். கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண் அளித்த புகாருக்குப் பிறகு அவரின் குற்றங்கள் அம்பலமாகியதை அடுத்து அவர் பதவி விலகினார்.

