சிங்கப்பூர்க் காவல்துறையின் முன்னாள் விசாரணை அதிகாரிக்கு 43 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள், பாதிக்கப்பட்டோர், சாட்சியம் அளித்தோர் எனப் பலரின் வாக்குமூலங்களைப் போலியாகத் தயாரித்த குற்றங்களை அந்த அதிகாரி எதிர்கொண்டார்.
ஜூரோங் காவல் நிலையத்தில் பணியாற்றிய 36 வயது விக்னேஷ்வரன் சுப்ரமணியம், போலி ஆவணங்களைத் தயாரித்ததன் தொடர்பில் நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தந்தையின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட மிகுந்த துக்கமும் மன உளைச்சலும் விக்னேஷ்வரனின் குற்றங்களுக்குக் காரணங்களாக இருந்தன என்று தற்காப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜூரோங் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட விக்னேஷ்வரன், குற்றஞ்சாட்டப்பட்டோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவுசெய்யவேண்டும். சாட்சியம் அளிப்போர், பாதிக்கப்பட்டோரிடம் இருந்தும் விக்னேஷ்வரன் வாக்குமூலங்களைப் பெறவேண்டும்.
அத்துடன் குற்றவாளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை விக்னேஷ்வரன் வகித்தார்.
குற்றவாளிகள் மீதான வழக்குகள் முடிந்தபிறகு நீதிமன்ற உத்தரவின்படி பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை உரிய நபர்களிடம் விக்னேஷ்வரன் ஒப்படைக்கவேண்டும். அவற்றைப் பெற்றுக்கொண்டதாக உரிமையாளர்களிடமிருந்து கையெழுத்து வாங்குவதும் விக்னேஷ்வரனின் பொறுப்புகளில் ஒன்று.
விக்னேஷ்வரனின் மேலதிகாரி 2023ஆம் ஆண்டு நடத்திய சோதனை நடவடிக்கைகள் மூலம் விக்னேஷ்வரனின் மேசையில் குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைக் கண்டெடுத்தனர்.
அதையடுத்து மூத்த விசாரணை அதிகாரி, விக்னேஷ்வரன் விசாரித்த வழக்குகள் அனைத்தையும் மறுஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார். அதில் விக்னேஷ்வரன் பறிமுதல் செய்த இரண்டு பொருள்களுக்கான ஆவணங்களில் போலியாகக் கையெழுத்திட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
விக்னேஷ்வரன், குற்றவாளிகளின் நான்கு வாக்குமூலங்களையும் பாதிக்கப்பட்டோர் அல்லது சாட்சியம் அளித்தோரின் மூன்று வாக்குமூலங்களையும் போலியாகத் தயாரித்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் விக்னேஷ்வரன் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

