சிறுமியைத் துன்புறுத்தியதாக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது ஜூலை 31ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட அந்த 56 வயது மாது, நான்கு வயதுப் பிள்ளையின் வலது முழங்காலுக்குக்கீழ் ஏப்ரல் 2ஆம் தேதி எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.
மாது குறித்தும் அவரது முன்னாள் பணியிடம் குறித்தும் நீதிமன்ற ஆவணங்களிலிருந்து விவரங்கள் நீக்கப்பட்டன.
சிறுமியை ஒழுங்காக உட்கார வைப்பதற்காக முன்னாள் பாலர் பள்ளி ஆசிரியர் இவ்வாறு உதைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, பணியிலிருந்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இவ்வழக்கு ஜூன் மாதம் பலரது கவனத்தைப் பெற்றது.
சம்பவம் குறித்து ஏப்ரல் 3ஆம் தேதி தகவல் கிடைத்ததாக பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு ஜூன் 5ஆம் தேதி தெரிவித்தது.
விதிமீறல் தொடர்பில் அந்த மாது மீதும் பாலர் பள்ளி நடத்துநர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அமைப்பு கூறியது.
“தவறிழைத்த ஆசிரியர் பின்பு ஆசிரியர் பணியிலிருந்து விலகினார். அதையடுத்து பாலர் பள்ளித் துறையில் அவர் பணியாற்றவும் இல்லை,” என்றார் அமைப்பின் பேச்சாளர்.
தொடர்புடைய செய்திகள்
மாது மீதான வழக்கு செப்டம்பர் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிள்ளையைத் துன்புறுத்தும் குற்றச்சாட்டு நிரூபணமானால், எட்டாண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் $8,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.