தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போலி காணொளி குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கவுள்ள முன்னாள் அதிபர் ஹலிமா

1 mins read
be881503-4590-47e7-9d0e-1cb387f1712e
தம்மைப் போலவே இணையத்தில் பரவும் காணொளி முற்றிலும் போலியானது என்று சாடினார் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் தம்மைப் போல இணையத்தில் பரவிவரும் டீப்ஃபேக் காணொளி குறித்து காவல்துறையிடம் புகாரளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். அந்தக் காணொளியில் திருவாட்டி ஹலிமா அரசாங்கத்தைக் குறைகூறுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 15ஆம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் காணொளி பற்றி பதிவிட்ட திருவாட்டி ஹலிமா, அது முற்றிலும் போலியானது என்றும் அதில் தமது குரல் அச்சு பிசகாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலைச் சுட்டிய அவர், “முக்கியமான இந்தக் காலக்கட்டத்தில் வாக்காளர்களைக் குழப்ப செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது அச்சத்தை அளிக்கிறது,” என்றார்.

பொதுத் தேர்தலின்போது அனைத்து கட்சிகளும் நியாயமான முறையில் போட்டியிடும்படியும் திருவாட்டி ஹலிமா கேட்டுக்கொண்டார்.

“யார் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் தேர்தலில் பங்கேற்போர் நியாயமாகவும் கண்ணியமாகவும் நடந்துகொள்ளவேண்டும்,” என்று திருவாட்டி ஹலிமா வலியுறுத்தினார்.

நேர்மையாகப் போட்டியிடவேண்டுமே தவிர போலி காணொளிகள் போன்ற தவறான உத்திகளைப் பயன்படுத்தவேண்டாம் என்று அவர் கூறினார்.

திருவாட்டி ஹலிமா சிங்கப்பூரின் எட்டாவது அதிபர். அவர் 2017ஆம் ஆண்டுமுதல் 2023ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.

அவர் 2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற நாயகராகவும் பொறுப்பு வகித்தார்.

குறிப்புச் சொற்கள்