2024ஆம் ஆண்டு, ஜூன் 28ஆம் தேதியன்று, சர்க்கியூட் ரோட்டில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் சிறை அதிகாரி ஒருவர், $21.46 மதிப்புள்ள நான்கு பெட்டி இருமல் மிட்டாய்களைத் திருடினார்.
47 வயதான எடி டான் கியிம் ஹியோங், திருட்டுக் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால், மே 7 அன்று அவருக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டது.
டானின் வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்தபோது, அவர் முக்கியமற்ற நிர்வாகப் பணிகளுக்கு மாற்றப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் சிங்கப்பூர் சிறைத் துறை தெரிவித்தது, அதற்கு முன்பு அவர் மார்ச் 1ஆம் தேதி தமது பதவியை ராஜினாமா செய்தார்.
“எங்கள் அதிகாரிகளின் எந்தவொரு தவறான நடத்தையையும் நாங்கள் தீவிரமாகக் கருதுகிறோம். அனைத்து சிறை அதிகாரிகளும் நேர்மை, ஒழுக்கம், தனிப்பட்ட நடத்தை ஆகியவற்றின் முன்மாதிரியான தரங்களை நிலைநிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று மே 8 அன்று சிங்கப்பூர் சிறைத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
ஜூன் 28, 2024 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில், எடி டான் ஒரு பையுடன் ஷெங் சியோங் பேரங்காடிக்குள் நுழைந்ததாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் டான் ஜிங் மின் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கடையின் சில்லறை விற்பனை உதவியாளர்களில் ஒருவர் எடி டான் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்வதைக் கவனித்து, அவரைக் கண்காணிக்க முடிவு செய்தார்.
பின்னர் எடி டான், நான்கு பெட்டிகள் இருமல் மிட்டாய்களைத் தனது பையில் போட்ட பிறகு, பழப் பிரிவுக்குச் சென்று சில ஆப்பிள்களை எடுத்துக்கொண்டார்.
வாங்கிய ஆப்பிள் பழங்களுக்குப் பணம் செலுத்திவிட்டு, விரைவில் அந்தப் பேரங்காடியை விட்டு வெளியேறினார். சில்லறை விற்பனை உதவியாளர் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரின் கொள்முதல் ரசீதைச் சரிபார்த்தபோது, அவர் இருமல் மிட்டாய்களுக்குப் பணம் செலுத்தவில்லை என்பதைக் கண்டறிந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் குற்றம் சாட்டப்பட்டவரைப் பின்தொடர்ந்து சென்று ஷெங் சியோங்கிலிருந்து சிறிது தூரத்தில் அவரை நிறுத்தினார். அவரிடமிருந்து நான்கு பெட்டிகள் நிறைய இருமல் மிட்டாய்கள் மீட்கப்பட்டன.
பின்னர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, எடி டான் கைது செய்யப்பட்டார்.

