மின்சிகரெட் விநியோகித்ததாக முன்னாள் ஆயுதப்படை வீரர்மீது குற்றச்சாட்டு

மின்சிகரெட் விநியோகித்ததாக முன்னாள் ஆயுதப்படை வீரர்மீது குற்றச்சாட்டு

1 mins read
531a8496-2efc-4e8e-b85e-d5d022ee9c67
பிறரை ஏமாற்றிப் பணம் பெற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இப்போது மின்சிகரெட் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்குகிறார் பெஞ்சமின் சோங் யோங் பாங், 38. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் ஆயுதப்படையின் முன்னாள் கேப்டன் ஒருவர்மீது மின்சிகரெட் தொடர்பான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பெஞ்சமின் சோங் யோங் பாங், 38, என்ற அவர், மின்சிகரெட் தொடர்பான பொருள்களை வைத்திருந்ததாகவும் அவற்றை விநியோகித்தாகவும் சந்தேகிக்கப்படுகிறது. ராணுவ முகாம் ஒன்றில் அவர் இக்குற்றச்செயல்களைப் பலமுறை புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.

அத்துடன், கடந்த 2020-2023 காலகட்டத்தில் செம்பவாங் சாலைக்கு அருகே டிரான்சிட் சாலையில் உள்ள நீ சூன் முகாமிலும் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களை அவர் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஏமாற்று தொடர்பான குற்றங்கள் உட்பட 26 குற்றச்சாட்டுகளை சோங் எதிர்நோக்குகிறார்.

முன்னதாக, பலரையும் ஏமாற்றி 145,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பெற்றதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த 2025 நவம்பரில் முதன்முறையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சோங்மீது 18 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் அக்குற்றங்களை 2021க்கும் 2024க்கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்ததாகக் கூறப்பட்டது.

முதலீட்டிற்காக அல்லது தம் தாயாரின் மருத்துவச் செலவுகளுக்குத் தேவை எனக் கூறி சோங் மற்றவர்களிடமிருந்து பணம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வாறு பெற்ற பணத்தை தமது கடன்களை அடைக்கவும் செலவுகளுக்காகவும் அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, சிங்கப்பூர் ஆயுதப்படையில் சோங் தொடர்ந்து முழுநேரப் படைவீரராகத் தொடரவில்லை என்று 2025ல் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழிடம் தெரிவித்திருந்தார்.

வரும் மே 25ஆம் தேதி சோங் தமது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்