சிங்கப்பூர் ஆயுதப்படை (எஸ்ஏஎஃப்) முன்னாள் கேப்டன் பெஞ்சமின் சோங் யோங் பாங்கிற்குச் சக ஊழியர்களை ஏமாற்றிய குற்றத்திற்காகப் புதன்கிழமை (ஜூலை 29) 21 மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சக ஊழியர்கள் ஐவரிடம் இருந்து கிட்டத்தட்ட $87,000 பணத்தை ஏமாற்றியதையும் மின்சிகரெட் பயன்படுத்தியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
38 வயது சோங்கிற்கு $6,000 அபராதமும் விதிக்கப்பட்டது. ஏமாற்றியதாகக் கூறப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் மின்சிகரெட் சாதனங்கள் வைத்திருந்தது உட்பட மின்சிகரெட் தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
பாதிக்கப்பட்டோரில் அதிகமானோர் அவரின்கீழ் பணிபுரிந்தவர்கள். அவர்களுக்கு முழுப் பணத்தையும் சோங் திரும்பக் கொடுத்துவிட்டார்.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2011ஆம் ஆண்டுக்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் பொழுதுபோக்குக் கூடங்களுக்கும் ‘கராவோக்கே’ கூடங்களுக்கும் சென்றபோது சோங் கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தியதால் கடன் பிரச்சினை ஏற்பட்டது. அவரது கடன் தொகை எவ்வளவு என்பது துல்லியமாகக் குறிப்பிடப்படவில்லை.
அந்த நேரத்தில், இவர் விநியோக முகாமில் துணைக் குழுமத் தளபதியாகப் பணியாற்றினார்.
2021ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, 39க்கும் மேற்பட்ட தருணங்களில், சோங், அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் ஐவரிடம் அவர்களின் பணத்தை முதலீடு செய்ய உதவுவதாகப் பொய் கூறியும் அல்லது தமது தாயாரின் மருத்துவச் செலவுகளுக்குப் பணம் தேவை எனக் கூறியும் ஏமாற்றியுள்ளார்.
அவரது சக ஊழியர்கள் வெவ்வேறு வேளைகளில் மொத்தம் $86,750 பணத்தை அவரிடம் கொடுத்தனர். ஒவ்வோர் ஊழியரிடமிருந்தும் $10,000 முதல் $27,050 வரையிலான தொகையை அவர் ஏமாற்றினார்.
மேலும் சோங், 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து மின்சிகரெட்டுகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்; நீ சூன் முகாமில் உள்ள தமது அலுவலகத்தில் அவர் வெளிப்படையாக மின்சிகரெட் பிடித்தார். அது, அவரின்கீழ் பணிபுரிவோரிடையே மின்சிகரெட் பிடிப்பதை இயல்பான ஒரு கலாசாரமாக உருவாக்கியது என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

