வேலைக்குப் போகாமலிருந்ததற்காகப் போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த மருத்துவர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்குத் தற்காலிகமாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முறையான மருத்துவக் காரணம் எதுவுமின்றி அவர் இரண்டு நாள்கள் வேலைக்குப் போகாமலிருந்தார்.
டாக்டர் செரிடா யோங் சுன் யின் எனும் அந்த மருத்துவர் இவ்வாண்டு (2025) செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து 2028 செப்டம்பர் 2 வரை தற்காலிகமாகப் பணியிலிருந்து அகற்றப்படுவதாக அரசாங்க மின்னிதழில் வெளியான குறிப்புக் கூறுகிறது.
டாக்டர் யோங் கண்டிக்கப்பட்டார். அத்துடன் அவர் எதிர்காலத்தில் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடமாட்டார் எனும் எழுத்துபூர்வ உத்தரவாதத்தைச் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்திடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
வழக்கு விசாரணைகளுக்காகும் செலவையும் டாக்டர் யோங் ஏற்கவேண்டும்.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் முதற்கட்ட மருத்துவராகப் பணிபுரிந்தபோது டாக்டர் யோங் சுன் யின் இந்தத் தவறுகளைச் செய்தார்.
சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையில் 2022ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதியும் அதே ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதியும் அவர் வேலைக்குச் செல்லவில்லை.
வேறொரு மருந்தகம் கொடுத்ததைப் போன்ற போலி மருத்துவச் சான்றிதழ்களை அவர் சமர்ப்பித்தார்.
அவர் மருந்தகத்திற்குச் செல்லாததும் அங்கு மருத்துவச் சான்றிதழ் பெறாததும் பிறகு தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
குற்றச்சாட்டை முதலில் மறுத்த டாக்டர் யோங், பின்னர் ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட மனஉளைச்சலை அவர் காரணமாகச் சுட்டினார்.
ஆயினும் அவருக்கு மனநலப் பிரச்சினை இருப்பதற்கான எந்தவோர் அறிகுறியும் இல்லை என்று சிங்கப்பூர் மருத்துவ மன்றம் தெரிவித்தது.