சர்பானா ஜூரோங் உள்கட்டமைப்பு ஆலோசனை நிறுவனத்தில் மூத்த முதன்மை கட்டட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் ஒருவர், இரண்டு பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி இணையத்தில் பரப்பியதன் தொடர்பில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
ஹெங் பூன் கெங், 53, 2021 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 21 வரை, ஒரு பெண்ணின் அந்தரங்கப் புகைப்படங்களை பாலியல் தொடர்பான 'சேமிபோய்' எனும் இணையத்தளத்தில் பதிவேற்றினார். மற்றொரு பெண்ணின் அத்தகைய படங்களையும் செப்டம்பர் 16ஆம், 17ஆம் தேதிகளில் பதிவேற்றினார்.
அப்படங்கள் அவருக்கு எவ்வாறு கிடைத்தன, அவருக்கும் அப்பெண்களுக்கும் என்ன தொடர்பு, குற்றங்கள் எவ்வாறு தெரிய வந்தன என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிட அனுமதி இல்லை.
ஹெங் மீதான வழக்குக்கு முந்திய கலந்துரையாடல் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும்.

