தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ் முரசு முன்னாள் ஆசிரியர் நிர்மலா: செய்தித்தாள் திறன்களுக்கு எக்காலத்திலும் தேவை இருக்கும்

2 mins read
497c3136-d37d-4ca2-af82-3c312dd426e1
தமிழ் முரசின் 90ஆம் ஆண்டுநிறைவு விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் பரிசு பெறும் முருகையன் நிர்மலா (வலமிருந்து மூன்றாமவர்),  2005 முதல் 2011 வரை தமிழ் முரசின் ஆசிரியராகச் செயல்பட்டார்.  - படம்: சுந்தர நடராஜ்

இணையத்தளங்கள், செய்தித்துறையின் எதிர்காலமாக இருக்கலாம். எனினும், அச்சு செய்தித்தாளுக்குத் தேவைப்படும் திறன்கள் காலம் கடந்தவை என்று தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் முருகையன் நிர்மலா தெரிிவித்தார்.

அச்சு இதழாக இருந்தாலும் சரி, இணையத்தளமாக இருந்தாலும் சரி. நல்ல செய்திக் கட்டுரை என்பது விளக்கமளிக்கக் கூடிய, வாசகரை ஈடுபடுத்தக் கூடிய, மனதில் நிற்கக்கூடியதாக இருக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

ஜூலை 6 ஆம் தேதி ஃபேர்மோண்ட் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ்முரசின் 60ஆம் ஆண்டுநிறைவு விழாவில் சிறப்பிக்கப்பட்ட முன்னாள் ஆசிரியர்களில் அவரும் ஒருவர்.

திருவாட்டி நிர்மலாவுடன் முன்னாள் ஆசிரியர் ஜவ்ஹரிலால் ராஜேந்திரனும் இதழை நிறுவிய கோ. சாரங்கபாணி, அதனைப் புதுப்பித்த வை. திருநாவுக்கரசு ஆகியோரின் குடும்பத்தினரும் மேடை நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டனர்.

தற்போது 71 வயதாக உள்ள திருவாட்டி நிர்மலா, 2005ல் தமிழ் முரசில் சேர்ந்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் பல்லாண்டுகளாகச் செய்தியாளராக இருந்த திருாட்டி நிர்மலாவின் மேலாண்மையில் தமிழ் முரசின் சந்தாக்கள் உயர்ந்தன. 2011 வரையில் பொறுப்பில் இருந்த திருவாட்டி நிர்மலாவுக்கு அடுத்து திரு ராஜேந்திரன் செயல்பட்டார்.

தமிழ் முரசு, சிங்கப்பூர் பிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின்கீழ் கொண்டுவரப்பட்டபோது புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்ற திருவாட்டி நிர்மலா, அன்றைய காலகட்டத்தில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த திறனாளர்கள் பலருடன் உறவுகளை உருவாக்க வேண்டியிருந்ததாகக் கூறினார்.

நிழற்படக் கலைஞர்கள், நிதித்துறையினர், விளம்பரப் பிரிவினர் எனப் பல தரப்பினரின் நம்பிக்கையையும் மதிப்பையும் உருவாக்க வேண்டியிருந்தது. அதனை வெற்றிகரகமாகச் செய்தோம் என்று திருவாட்டி நிர்மலா கூறினார்.

காலப்போக்கில் தமிழ் முரசு பரிணமித்து வந்ததைச் சுட்டி திருவாட்டி நிர்மலா, இணையப் பிரதி மீது செலுத்தப்படும் கூடுதலான கவனத்தை நல்ல மாற்றம் என வர்ணித்தார். 

இருந்தபோதும் அச்சிடப்படும் செய்தித்தாளின் பண்புகள் காலத்தால் அழியாதவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

செய்திக் காணொளிகளைத் தயாரிப்பதைக் காட்டிலும் அச்சுத்தாளுக்கு செய்தி எழுதுவது கடினம். எழுத்து வடிவமாகச் செய்தி படைப்பவர், ஒளி, ஒலியை நம்பியிருக்க முடியாது. கொல்லர் தொழிலும் அறுவை சிகிச்சை நிபுணர் தொழிலும் போன்றது இந்தத் தொழில். உங்கள் சொற்களால் வாசகர்களின் கவனத்தை அடி முதல் முடி வரை பெற்றிருக்கவேண்டும், என்று அவர் கூறினார்.

த நியூயார்க் டைம்ஸ், சவுத் சைனா மார்னிங் போஸ்ட் போன்ற நிறுவனங்கள், மின்னிலக்க வடிவிற்கு மாறினாலும் தங்கள் அச்சிதழ்களை உயர்தரப் படைப்புகளாகச் சந்தைப்படுத்துவதைத் திருவாட்டி நிர்மலா சுட்டினார்.

செய்தித்துறை மின்னிலக்கமயமாக இயங்கினாலும் தரமுள்ள, நீளமான கட்டுரைகளை வாசகர்கள் தொடர்ந்து வரவேற்பர் என்பது அவரது கருத்தாகும்.

தமிழ்ச் செய்தித்துறை என்பது ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு மட்டும் மொழிபெயர்ப்பது அன்று. “தமிழுக்கென்று சொல்வழக்கு, தாளநயம், தர்க்கவிதிகள் ஆகியவை உள்ளன. தமிழில் எழுதுவதற்கு நீங்கள் தமிழில்தான் யோசிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்