முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தமது தண்டனையை நிறைவேற்றியுள்ளார். இனி அவர் சிங்கப்பூர் சிறைச் சேவையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிங்கப்பூர் சிறைச் சேவை வெள்ளிக்கிழமை (ஜூன் 6) அறிக்கை வெளியிட்டது.
திரு ஈஸ்வரனுக்கு விதிக்கப்பட்ட வீட்டுக் காவல் திட்டம் நிறைவடைந்தது, இனி அவர் சிறைச் சேவையின் கட்டுப்பாட்டில் இல்லை என்று அது குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி ஈஸ்வரன்மீது, அரசாங்கச் சேவையில் அவர் இருந்தபோது, விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தது என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அவருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு முன்னாள் அமைச்சருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அதுவே முதல்முறை.
இதையடுத்து ஈஸ்வரன் அக்டோபர் 7ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
தமது தண்டனைக் காலத்தில் முதல் நான்கு மாதங்களை ஈஸ்வரன் சிறைச்சாலையில் கழித்தார்.
அதன்பிறகு ஈஸ்வரன், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் வீட்டுக் காவல் திட்டத்திற்கு மாற்றப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஈஸ்வரன் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதியுடையவர் ஆகிறார். அவர் மீண்டும் குற்றம் புரியும் சாத்தியம் குறைவு. மேலும், அவர் சிறையில் இருந்த காலத்தில் எந்தக் குற்றமும் புரியவில்லை என்பதுடன் அவருக்கு வலுவான குடும்ப ஆதரவு உள்ளது.
“இதன் அடிப்படையில் அவர் வீட்டுக் காவல் திட்டத்திற்குத் தகுதியுடையவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று சிறைத் துறை இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.
ஹோட்டல் தொழிலதிபரும் சிங்கப்பூரில் ‘எஃப்1’ கார்ப் பந்தயங்கள் நடைபெற முக்கியக் காரணமாக இருந்தவருமான பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங், லாம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் டேவிட் லாம் ஆகியோரிடமிருந்து ஈஸ்வரன் $400,000க்குமேல் மதிப்புள்ள அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டார்.
அதில் $380,000ஐ அவர் அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
ஈஸ்வரனின் வழக்கறிஞர் தவிந்தர் சிங் எட்டு வாரங்களுக்கு மிகாத சிறைத்தண்டனை விதிக்கும்படித் கேட்டுக்கொண்டார். ஆனால் நீதிபதி ஈஸ்வரனுக்கு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.