முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தொடர்பான ஊழல் வழக்கு விசாரணை இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க இருக்கிறது.
ஈஸ்வரனை மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங் தலைமையிலான வழக்கறிஞர்கள் குழு பிரதிநிதிக்கிறது.
இந்நிலையில், அரசு தரப்பு சாட்சிகளின் எழுத்துபூர்வ வாக்குமூலங்களைப் பெற அவர் மூன்றாவது முறையாக செய்த விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் செப்டம்பர் 3ஆம் தேதியன்று நிராகரித்தது .
சீராய்வு மனு தாக்கல் செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் 62 வயது ஈஸ்வரன் அனுமதி கோரியிருந்தார்.
வழக்கு தொடர்பான அம்சங்களில் தற்காப்புத் தரப்பிடம் தெரிவிக்க வேண்டியவற்றில் சாட்சிகளின் எழுத்துபூர்வ வாக்குமூலங்களும் அடங்கும் என்பதை வாதிட தமது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் பச்சைக்கொடி காட்ட வேண்டும் என்று ஈஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் தவிந்தர் சிங்கின் வாதத்தைக் கேட்ட பிறகு, ஈஸ்வரனின் ஆக அண்மைய விண்ணப்பத்தை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.
இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டிய நிலை அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு ஏற்படவில்லை.
ஈஸ்வரன்மீது மொத்தம் 35 குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அவற்றில் இரண்டு, $166,000 பெறுமானமுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள்.
அரசாங்க ஊழியராக இருந்துகொண்டு $237,000க்கும் அதிகமான அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாக 32 குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் செல்வந்தர் ஓங் பெங் செங், லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் லம் ஆகியோருடனான கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடையவை.
இந்த வழக்கு தொடர்பாக சாட்சிகள் தந்த எழுத்துபூர்வ வாக்குமூலங்களைப் பெற ஈஸ்வரன் முதல்முறையாக விண்ணப்பம் செய்தபோது அதை நீதிமன்றம் ஜூன் 11ஆம் தேதியன்று நிராகரித்தது.
இரண்டாவது முறை செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீதிபதி வின்சென்ட் ஹூங் ஜூலை 19ஆம் தேதியன்று நிராகரித்தார்.
வழக்கு விசாரணையின்போது அழைக்கப்படும் ஒவ்வொரு சாட்சியும் அளித்த எழுத்துபூர்வ வாக்குமூலம் தங்களிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஈஸ்வரனின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால் வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்கப்படும் எழுத்துபூர்வ வாக்குமூலங்களை மட்டுமே தற்காப்பு வழக்கறிஞர்களிடம் கொடுக்க வேண்டும் என்று சட்டம் கூறுவதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.