வியட்னாமின் முன்னாள் அதிபர் டிரான் டுக் லுவோங் மே 20ஆம் தேதியன்று காலமானார்.
அவருக்கு 88 வயது.
நோய் காரணமாக அவர் உயிரிழந்ததாக வியட்னாமிய ஊடகம் தெரிவித்தது.
திரு டிரான், 1997ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை வியட்னாமின் அதிபராகப் பதவி வகித்தார்.
வியட்னாமியத் தலைவர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் அனுதாபக் கடிதங்களைத் திங்கட்கிழமை (மே 26) அனுப்பினர்.
திரு டிரான் அதிபராக இருந்தபோது வியட்னாம் பேரளவில் மாற்றம் அடைந்துகொண்டிருந்ததாகவும் அவர் மிகுந்த முனைப்புடன் நாட்டை வழிநடத்தியதாகவும் திரு தர்மன் கூறினார்.
திரு டிரான் தமது வாழ்க்கையை வியட்னாமுக்காக அர்ப்பணித்தவர் என்று மூத்த அமைச்சர் லீ புகழாரம் சூட்டினார்.
அவரது தலைமையின்கீழ் வியட்னாமுக்கும் சிங்கப்பூர் உட்பட மற்ற தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுவடைந்ததாக அவர் கூறினார்.

