முன்னாள் பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு

1 mins read
20709b13-33f8-4652-8bb6-4e420db25162
கடுமையான எச்சரிக்கையுடன் லியோங் பெக் கானை விடுவிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்தனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோதமாக கடன் வழங்கும் நிறுவனத்துக்கு உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உட்பட 14 குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் வழக்கறிஞர் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான 14 குற்றச்சாட்டுகளும் மீட்டுக் கொள்ளப்பட்டு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற வழக்குக்கு முந்திய கலந்துரையாடலில் திருவாட்டி லியோங் பெக் கான், 70, மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது அவர் மீது இதே போன்ற குற்றச்செயல்களுக்கு மீண்டும் குற்றஞ்சாட்ட முடியாது.

இந்த வழக்குப் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் விசாரித்தபோது, 2019 செப்டம்பரில் லியோங் மீது ஆரம்பத்தில் கடன் கொடுப்போர் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டதாக அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் கூறியது.

இந்த வழக்கில் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளை கவனமாகப் பரிசீலித்த பிறகு, லியோங் மீது வழக்குத் தொடருவதற்குப் பதிலாக கடுமையான எச்சரிக்கையை விடுக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் முடிவு செய்ததாக அந்த அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அதனை, மாவட்ட நீதிபதி டெரன்ஸ் டே ஏற்றுக்கொண்டார்.

2012 முதல் 2014 வரை சட்டவிரோத கடன் வழங்கும் நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட குழுவில் திருவாட்டி லியோங்கும் அங்கம் வகித்தார்.

அப்போது அவர், வழக்கறிஞராக பணியாற்றினார்.

இன்வெஸ்ட் ஹோ புரோப்பர்ட்டிஸ் என்ற நிறுவனத்தின் சட்டவிரோத கடன் வழங்கும் நடவடிக்கைகளுக்கு பல ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து உதவியது லியோங் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

குறிப்புச் சொற்கள்