ஜூலையில் சிங்கப்பூருக்கு வருகிறது ஃபார்முலா ஒன் கண்காட்சி

ஜூலையில் சிங்கப்பூருக்கு வருகிறது ஃபார்முலா ஒன் கண்காட்சி

2 mins read
bf0bc355-95c6-4355-ae09-e0d7243cb2a7
ஃபார்முலா ஒன் கார் பந்தயக் கண்காட்சி, ஜூலை 23ஆம் தேதி கரையோரப் பூந்தோட்டங்களில் தொடங்கப்படும். - படம்: எஃப்1

உலகப் புகழ்பெற்ற ஃபார்முலா ஒன் (எஃப்1) கார் பந்தயக் கண்காட்சி வரும் ஜூலையில் சிங்கப்பூருக்கு வரவுள்ளது.

ஆசியாவிலேயே முதன்முறையாகச் சிங்கப்பூரில் இடம்பெறும் இக்கண்காட்சி, ஜூலை 23ஆம் தேதி கரையோரப் பூந்தோட்டங்களில் தொடங்கப்படும் என்று எஃப்1 புதன்கிழமை (ஜூன் 10) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தது.

எஃப்1 பந்தயத்தின் 76 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டாடும் வகையில், அதன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை உன்னதமாக விவரிக்கும் இந்தக் கண்காட்சியை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

கண்காட்சிக்கு வருவோர், எஃப்1 உலக வெற்றியாளர் பந்தயத்தின் தொழில்நுட்பப் புதுமைகள், பொறியியல் திறன்கள், புகழ்பெற்ற பந்தய வீரர்கள், பந்தய வரலாற்றை மாற்றியமைத்த முக்கியத் தருணங்கள் குறித்த பல சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ளலாம் என்று எஃப்1 கூறியது.

இக்கண்காட்சியை நடத்தும் உலகின் 11ஆவது நகராகச் சிங்கப்பூர் திகழவுள்ளது. இதற்கு முன்பு மட்ரிட், வியன்னா, டொரோன்டோ, லண்டன், ஓபர்ஹவுசன், ஆம்ஸ்டர்டாம், பியூனஸ் ஐரெஸ் உள்ளிட்ட நகர்களில் நடத்தப்பட்ட இக்கண்காட்சியை இதுவரை 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.

இக்கண்காட்சியின் முதற்கட்ட நுழைவுச்சீட்டு விற்பனைக்கான காத்திருப்புப் பட்டியல் தற்போது தொடங்கியுள்ளது. ஜூன் 17ஆம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி 47 மணி நேரத்திற்கு நுழைவுச்சீட்டு விற்பனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, ஜூன் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டு விற்கப்படும் என்று எஃப்1 தெரிவித்தது.

ரசிகர்கள் எஃப்1 கண்காட்சியின் அதிகாரபூர்வ இணையத்தளம் வழியாகக் காத்திருப்புப் பட்டியலில் தங்களைப் பதிவுசெய்துகொள்ளலாம்.

கண்காட்சிக்கான நுழைவுச்சீட்டுக் கட்டணம், ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு $29லிருந்து தொடங்கும். 13 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு $40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதை எட்டியவர்கள் $49 செலுத்த வேண்டும்.

குறிப்புச் சொற்கள்