உலகத்தின் நிச்சயமற்ற சூழலில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு விமானப் போக்குவரத்துத் துறை, விண்வெளித் துறை இரண்டும் முக்கிய அடித்தளங்களாக இருக்கும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சியின் அதிகாரபூர்வ தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான், அனைத்துலக அளவில் உள்ள விமானங்களின் எண்ணிக்கையில் 45 விழுக்காட்டுக்கும் அதிகமான விமானங்களை ஆசிய பசிபிக் வட்டாரம் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
சாங்கி கண்காட்சி நிலையத்தில் பத்தாவது முறையாக நடைபெறவிருக்கும் கண்காட்சி, பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை இடம்பெறும்.
கடந்த ஆண்டு பதிவான அனைத்துலக வளர்ச்சியில் ஆசிய பசிபிக்கின் விமானப் போக்குவரத்துத் துறை 52 விழுக்காட்டை வகித்தது. பயணிகள் விமானம், சரக்கு விமானம் ஆகியவற்றால் உலகின் ஆக அதிக வளர்ச்சி விகிதம் பதிவானது என்றார் திரு கான்.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் முன்னுரைப்பின்படி, விமான நிறுவனங்களின் நிகர லாபம் இவ்வாண்டு $41 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துலக அளவில் இவ்வாண்டின் சிங்கப்பூர் விமானக் கண்காட்சி, விமானத் துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கண்காட்சியாக இருக்கிறது என்ற திரு கான், தற்காப்புக் கண்காட்சியில் தொழில்துறைத் தலைவர்கள், வர்த்தகத் தலைவர்கள், அரசாங்க, ராணுவப் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர் என்றார்.
அது விமானத் துறையிலும் தற்காப்புத் துறையிலும் அடுத்தடுத்த அத்தியாயங்களை உருவாக்க வழியமைத்துத் தருகிறது என்றார் திரு கான்.
சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் இந்த முறை 50 நாடுகளிலிருந்து 1,000க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொள்ளவிருக்கின்றன என்றும் வர்த்தக விமானங்களிலிருந்து தற்காப்பு விமானங்கள் வரை பல வகையான விமானங்களைக் கண்காட்சியில் காண முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகரிக்கும் வருமானம், அதிகரிக்கும் நடுத்தர வகுப்பில் உள்ளோர் எண்ணிக்கை, வலுவான வட்டார ஒருங்கிணைப்பு ஆகியவற்றால் விமானப் போக்குவரத்துத் துறை துரிதமாக வளர்ச்சி காண்பதாகத் திரு கான் குறிப்பிட்டார்.
2030களில் ஐந்தாம் முனையம் திறக்கப்படும்போது, சாங்கி விமான நிலையம் 200க்கும் அதிகமான நகரங்களுடன் இணைந்திருக்கும் என்று திரு கான் கூறினார்.

