தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
புகழ்பெற்ற வர்த்தகராக மட்டுமின்றி சமூகத்தின் தேவைகளைப் புரிந்து செயலாற்றிய தலைவராகவும் திகழ்ந்தார்.

ஜோதி ஸ்டோர் புஷ்ப கடை நிறுவனர் முருகையா ராமச்சந்திரா காலமானார்

2 mins read
40f27dee-2353-41bb-ae36-a45180d62349
ஜோதி வர்த்தக குழுமத்தின் நிறுவனர் முருகையா ராமச்சந்திராவுடன் அவர் மகனும் குழுமத்தின் தலைவருமான ராஜகுமார் சந்திரா (வலது) - படம்: இந்தியாசே மீடியா
multi-img1 of 2

ஜோதி ஸ்டோர் புஷ்ப கடை, ஜோதி நிறுவனக் குழுமத்தின் நிறுவனர் முருகையா ராமச்சந்திரா தம் 93 வயதில் காலமானார்.

மருத்துவமனையில் முன்தினம் சேர்க்கப்பட்ட திரு ராமச்சந்திராவின் உயிர் வியாழக்கிழமை (ஜூன் 19) இரவு ஏறத்தாழ 9 மணி பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.

1931 ஆம் ஆண்டு டிசம்பர் 21ல் மன்னார்குடி மாவட்டத்தின் திருமக்கோட்டையில் திரு ராமச்சந்திரா பிறந்தார்.

1948ல் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 18வது வயதில் வந்த திரு ராமச்சந்திரா, பின்னர் 1961ல் சிறிய ஒட்டுக் கடை ஒன்றைத் தொடங்கினார். முதல் மகளான ஜோதியின் பெயரை அவர் தமது கடைக்குச் சூட்டினார்.

அங்கிருந்து அவரது வர்த்தகம் படிப்படியாக வளர்ந்து தற்போது கேம்பல் லேனிலுள்ள ஐந்து மாடி வர்த்தகமாக இயங்கி வருகிறது. 

65 ஆண்டு கால நிறைவை எட்டிய ஜோதி ஸ்டோர், சிங்கப்பூரில் பலருக்கும் நன்கு அறிமுகமான வர்த்தகப் பெயராகத் திகழ்கிறது.

இல்லப் பூஜைக்கும் பண்டிகைகளுக்கும் தேவையான பொருள்கள், உணவு, மளிகைப் பொருள்கள் இந்தியப் பாரம்பரிய மருத்துவப் பொருள்கள், விளக்குகள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டப் பொருள்களை ஜோதி குழுமம்,  இந்தியச் சமூகத்தினருக்குப் பல தலைமுறைகளாக விற்றுவருகிறது.

புகழ்பெற்ற வர்த்தகராக மட்டுமின்றி அவர் சமூகத்தின் தேவைகளைப் புரிந்து செயலாற்றிய தலைவராகவும் திகழ்ந்தார்.

சிங்கப்பூரிலுள்ள பல்வேறு ஆலயங்களுக்கு மலர்களையும் ஆபரணங்களையும் வழங்கி குடமுழுக்குகள், அன்னதானங்கள், உபயங்கள் போன்ற காரியங்களுக்குத் திரு ராமச்சந்திரா பல்லாண்டுகளாக நிதியளித்துத் தொண்டாற்றியதாக அவரது மகன் திரு ராஜகுமார் சந்திரா தெரிவித்தார்.

சிண்டா, சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை ஆகிய அமைப்புகளையும் ஆதரித்து பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கும் திரு ராமச்சந்திரா துணை நின்றுள்ளார்.

“என் தந்தை கல்வியைப் பெரிதும் மதிப்பவராக இருந்ததால் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தோரின் கல்விக்காக நிதியுதவி வழங்குவதில் விருப்பம் காட்டினார்,” என்று ஜோதி குழுமத்தைத் தற்போது வழிநடத்தும் திரு ராஜகுமார் கூறினார்

திரு ராமச்சந்திரா, மூன்று மகள்கள், புதல்வர் ராஜகுமார், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோரை விட்டுப் பிரிந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) அவரது நல்லுடல் மண்டாய் தகனச் சாலைக்குப் புறப்படும்.

குறிப்புச் சொற்கள்