நிறுவியோர் நினைவகத்தின் இரண்டாவது கண்காட்சி, புதன்கிழமையன்று (அக்டோபர் 22) ஊடகத்தினருக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
‘பார்வையாளர் மட்டுமல்ல: சிங்கப்பூரின் பல்லினப் பண்பாட்டு உருவாக்கங்கள்’ என்ற தலைப்புகொண்ட இக்கண்காட்சி, அக்டோபர் 31ஆம் தேதி முதல் 2026 மார்ச் 29 வரை தேசியக் கலைக்கூடத்தின் நகர மண்டப அரங்கில் இடம்பெறும்.
டிசம்பர் 9, 1959ல் ஆயிரக்கணக்கானோர் பாடாங்கில் ஒன்றுகூடியிருந்த நிலையில், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ, முன்னாள் நகர மண்டபத்தின் படிகளில் நின்று பேசினார். அங்குக் கூடியிருந்த மக்கள் “பார்வையாளர்கள் மட்டுமல்லர், நாட்டைக் கட்டியமைப்பதில் துடிப்பான பங்கேற்பாளர்களும்,” என்று அவர் கூறியதையே இக்கண்காட்சி அடிப்படையாகக் கொள்கிறது.
அதேபோல, கண்காட்சியைக் காணவரும் மக்கள், வெறும் பார்வையாளர்களாக அல்லாமல், கண்காட்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
“கண்காட்சிக்குள் நுழைவதற்குமுன் வெளியேயுள்ள கைப்பட்டையை மக்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கைப்பட்டையை அணிந்தால் நீங்கள் கண்காட்சிக்கு வரும் பிறருடன் பேசத் தயாராக உள்ளீர்கள் என்பதைக் குறிக்கும். இதன்மூலம் பல்லினப் பண்பாடு பற்றி மக்கள் சேர்ந்து உரையாடலாம்,” என்றார் நிறுவியோர் நினைவகத்தின் பங்காளித்துவ, நிகழ்ச்சிகள் துணை இயக்குநர் பவானி செல்வகுமார்.
1950களுக்கும் 1970களுக்கும் இடைப்பட்ட காலத்தில், சிங்கப்பூரின் பல இன, சமய, மொழிச் சமூகத்தின் அடையாளம் உருவெடுத்த முறையையும் அதனால் குடிமக்களின் வாழ்வில் ஏற்பட்ட தாக்கத்தையும் இக்கண்காட்சி ஆராய்கிறது.
அவ்வாறு, பல்லினச் சமூகத்தை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவை 1959ல் தொடங்கப்பட்ட ‘அநேக ராகம் ராக்யாட்’ (Aneka Ragam Ra’ayat/“People’s Cultural Concerts”) தொடர் வெளிப்புற இலவச இசை நிகழ்ச்சிகள். அவற்றை உயிரோவிய (animation) வடிவில் உயிர்ப்பிக்கிறது கண்காட்சியின் தொடக்க அங்கம்.
அந்நிகழ்ச்சிகளில் நடனமாடிய புகழ்பெற்ற நடனமணியும் மருத்துவருமான டாக்டர் உமா ராஜன் தம் நினைவுகளைப் பகிர்ந்து அந்த அங்கத்தின் உருவாக்கத்துக்கு வித்திட்டுள்ளார்.
“பல்லினக் கலைஞர்களையும் ஒரே மேடையில் இணைத்தவை அந்நிகழ்ச்சிகள். அதனால், சீன, மலாய், தமிழ், மேற்கத்திய பாடல்கள், நடனங்களை ஒன்றாகக் கேட்டு, பார்த்து எங்களுக்குப் பழகிப் போனது. சிங்கப்பூர் இந்தியர் என்ற அடையாளம் எனக்குள் உருவானதற்கு அது வழிவகுத்தது,” என்றார் டாக்டர் உமா ராஜன்.
“பார்வையாளர்களில் பெரும்பாலோர் இளையர்களாக இருப்பர். அவர்களிடத்தில் கலை ரசனை வளர வளர, அவர்கள் பணம் கொடுத்து, நாடக, கலை அரங்குகளுக்கும் சென்றனர். அதனால், கலை வளர்ந்தது. அன்று என்னுடன் நிகழ்ச்சி படைத்த கலைஞர்கள் இன்றும் என் நண்பர்களாக உள்ளனர்,” என்றார் அவர்.
சிங்கப்பூர் முழுத் தன்னாட்சி பெற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில், 1959, ஆகஸ்ட் 2ஆம் தேதி, ‘அநேக ராகம் ராக்யாட்’ முதல் நிகழ்ச்சி 22,000 பேர் முன்னிலையில் பூமலையில் நடைபெற்றது.
சிங்கப்பூரின் முதல் கலாசார அமைச்சர் எஸ் ராஜரத்தினம் 1957ல் படைத்த ‘தேச உருவாக்கம்’ எனும் ஆறு பாக வானொலி நாடகத் தொடரை அடிப்படையாகக் கொண்டு உள்ளூர் நாடக ஆசிரியர் கேலீன் டான் மூன்று பாக ஒலி நாடகத்தை உருவாக்கியுள்ளார். இனம், மொழி, தேச உணர்வு ஆகிய கருக்களில் அமைந்த இந்நாடகத்தையும் மக்கள் கண்காட்சியில் காணலாம்.
தேசிய உறுதிமொழி பற்றி அமைச்சர்கள் ஓங் பாங் பூன், எஸ் ராஜரத்தினம் பரிமாறிக்கொண்ட அசல் 1966 கடிதங்களும் காட்சிக்கு உள்ளன. 1964 இனக் கலவரங்கள், கலப்புத் திருமணங்கள் குறித்த பத்திரிகை ஆவணங்களையும் காணலாம்.
கண்காட்சியைக் காணவந்த கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், “அனைத்து வயதினருக்கும் ஏற்புடைய வகையில் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. என்னைப் பழங்காலத்துக்குக் கொண்டுசென்ற அதே நேரம் நிகழ்காலத்துடனும் தொடர்பு ஏற்படுத்தியது. இனம் பற்றிச் சிந்தனையைத் தூண்டும் கேள்விகளையும் எழுப்பியது,” என்றார்.

