தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாட்டாளிக் கட்சியில் மேலும் நான்கு புது வேட்பாளர்கள்

3 mins read
170e3454-9ce4-443d-a795-4a0950dc1a23
(இடமிருந்து வலம்) டாக்டர் ஓங் லூ பிங், திரு ஜிம்மி டான் கிம் டெக், ஆண்ட்ரே லோ வு யாங், திருவாட்டி அலெக்சிஸ் டாங் பெய் யுவான்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி மேலும் நான்கு புதுமுகங்களைக் களமிறக்கவுள்ளது.

டாக்டர் ஓங் லூ பிங், திரு ஜிம்மி டான் கிம் டெக், திருவாட்டி அலெக்சிஸ் டாங் பெய் யுவான், திரு ஆண்ட்ரே லோ வு யாங் ஆகிய அந்நால்வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

அவர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவர் என்ற விவரம் வரும் நாள்களில் வெளியிடப்படும் என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.

பலரும் அறிந்த முகமாக அறியப்படும் டாக்டர் ஓங் லூ பிங், 48, சிங்கப்பூர் மனநலக் கழகத்தின் முன்னாள் மூத்த தலைவர் ஆவார். கடந்த 2023 நவம்பரிலிருந்து அவர் பாட்டாளிக் கட்சியுடன இணைந்து தொண்டாற்றி வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் புதிய பொங்கோல் குழுத்தொகுதியில் அவர் முதன்முதலில் காணப்பட்டார்.

“பாட்டாளிக் கட்சியில் சேர்வது சிங்கப்பூருக்கு நான் செய்யும் இன்னொரு சேவையாகும் எனக் கருதுகிறேன்,” என்றார் டாக்டர் ஓங்.

அனைத்துலக நிதி தொழில்நுட்ப நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார் திரு ஆண்ட்ரே லோ வு யாங், 34.

2020ஆம் ஆண்டில் திரு லோ பாட்டாளிக் கட்சியில் சேர்ந்தார். செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவாவின் செயலக உதவியாளராக நியமிக்கப்பட்டு சேவையாற்றி வந்தார்.

விரைவில் தந்தையாகவிருக்கும் திரு லோ, வருங்காலத் தலைமுறைகளுக்கு ஒரு சிறந்த சிங்கப்பூரை அமைப்பது அவசியம் என்று கூறினார்.

39 வயது திருவாட்டி அலெக்சிஸ் டாங் பெய் யுவான், வணிக மேம்பாட்டு மூத்த இயக்குநராக உள்ளார்.

முன்பு நிதித் துறையில் இருந்த அவர் கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளாக பாட்டாளிக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி சார்பில் போட்டியிடுவது பற்றிக் குறிப்பிட்ட திருவாட்டி அலெக்சிஸ், “என் பல்வேறு துறை அனுபவம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு தொழில்துறையை உருவாக்க உதவும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இன்னொரு புதுமுக வேட்பாளரான திரு ஜிம்மி டான் கிம் டெக், 53, தெம்பனிஸ் தொகுதியில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்தத் தொழில் செய்து வரும் இவர் 2018ஆம் ஆண்டில் பாட்டாளிக் கட்சியில் சேர்ந்தார்.

2023ஆம் ஆண்டில் திரு பிரித்தம் சிங்கின் செயலக உதவியாளராக நியமிக்கப்பட்ட இவர், பிறகு இவ்வாண்டின் தொடக்கத்தில் அவரது சட்டமன்ற உதவியாளராக ஆனார்.

“சிங்கப்பூரில் எதிர்க்கட்சி பிரதிநிதித்துவத்துடன் கூடிய சமநிலையான அரசியலமைப்பு இருக்க வேண்டும்,” என்று தமது அறிமுக உரையில் குறிப்பிட்டார் திரு டான்.

பொதுத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி 17 புதுமுக வேட்பாளர்களைக் களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு நாள்களில் இதுவரை எட்டு வேட்பாளர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த சில நாள்களில் பாட்டாளிக் கட்சி மேலும் பல வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்சம் மூன்றில் ஓர் இடத்தில் போட்டியிடும் நிலையில் பாட்டாளிக் கட்சி இருப்பது மிக முக்கியம் என்றார் திரு சிங்.

“நாங்கள் இந்த இலக்கை இன்னும் அடையவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயல்வோம்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்