சாங்கி சாலையில் உள்ள செல்லப்பிராணி விற்பனைக் கடை ஒன்றுக்குள் புகுந்து திருடியதாகக் கூறப்படும் நால்வர் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து புதன்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அந்தக் கடையிலிருந்து ஏறத்தாழ $7,200 மதிப்பிலான பறவைகள், கூண்டுகள், ரொக்கம் திருடப்பட்டன.
அந்த நான்கு சந்தேக நபர்களில் 27 வயது ஆடவரும் 14க்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மூவரும் அடங்குவர்.
கண்காணிப்புக் கருவிகளில் பதிவான படங்கள், களத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மூலம், பிடோக் காவல்துறைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த நால்வரை அடையாளம் காண முடிந்தது.
அந்த நால்வரிடமிருந்து $7,110 பெறுமானமுள்ள பறவைகளும் கூண்டுகளும் மீட்கப்பட்டன.
அந்த 27 வயது ஆடவர் மீதும் 17 வயதுடைய இரு சந்தேக நபர்கள் மீதும் சனிக்கிழமை (செப்டம்பர் 21) குற்றஞ்சாட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த 14 வயது சந்தேக நபர் மீதான விசாரணை தொடர்கிறது.

