தெம்பனிஸ் வட்டாரத்தில் கடன்முதலைத் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இளையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளையர்களில் இருவர் ஆண்கள்; இருவர் பெண்கள். அவர்கள் 18 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 33ல் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டின் கதவு சைக்கிள் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது குறித்து ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை 5.50 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
கடன்கொடுத்தவரின் குறிப்பு காணப்பட்டதாகவும் அது கூறியது
விசாரணை மேற்கொண்ட காவல்துறையின் பிடோக் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், காவல்துறைக் கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் உதவியுடன் சந்தேகத்துக்குரிய நால்வரையும் அடையாளம் கண்டனர். அதே நாளில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த இளையர்களிடமிருந்து நான்கு கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில் அந்த நால்வரும் மற்றொரு கடன்முதலைத் துன்புறுத்தல் சம்பவத்திலும் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, ஜனவரி 2ஆம் தேதி ஜூ சியாட் ரோட்டில் உள்ள அடுக்குமாடி வீட்டின் வாயிற்கதவில் கறுப்புச் சாயம் தெளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 29 வயது ஆடவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அந்த வீட்டின் இரும்பு கேட்டிலும் மாடிப்படிகளிலும் கறுப்புச் சாயம் தெளிக்கப்பட்டிருந்தது. கடன் கொடுத்தவரின் குறிப்பும் காணப்பட்டது.
சந்தேகத்துக்குரிய ஆடவரின் கைப்பேசி, கடன்கொடுத்தவர் குறிப்பு, சாயக் கலன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இளையர்கள் ஐவர் மீதும் கடன்கொடுப்போர் சட்டம் 2008ன்கீழ் ஜனவரி 4ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.