செப்டம்பர் 30 வரை நான்கு நிறுவனங்கள் தொடர்ந்து கூடுதல் ஓட்டுநர் கட்டணத்தைப் பெறும்

செப்டம்பர் 30 வரை நான்கு நிறுவனங்கள் தொடர்ந்து கூடுதல் ஓட்டுநர் கட்டணத்தைப் பெறும்

2 mins read
12039e45-a29b-4c98-997a-fdd5453b4034
உயர்ந்துவரும் எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவும் அந்தக் கூடுதல் கட்டணம், முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டாக்சி அல்லது தனியார் வாடகை வாகனச் சேவைகளுக்கு முன்பதிவு செய்ய நான்கு நிறுவனங்களைப் பயன்படுத்தும் பயணிகள், செப்டம்பர் இறுதிவரை தொடர்ந்து கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஓட்டுநர்கள் அதிகமான செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிப்பதில் உதவ, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

‘சிடிஜி ஸிக்’, கிராப், கோஜெக், ‘டடா’ ஆகியவை ஓட்டுநர்களுக்கான கூடுதல் கட்டணத்தை செப்டம்பர் 30ஆம் தேதிவரை நீட்டிக்கும் என்று தேசிய தனியார் வாடகை வாகனங்கள் சங்கம் புதன்கிழமை (ஜூலை 22) வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசுடன் இணைந்துச் செயல்படும் அந்தச் சங்கம், நேரடிப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களின் நலன்களைப் பிரதிநிதிக்கிறது.

ஓட்டுநர்களின் செலவினங்கள், செயல்பாட்டுச் செலவுகள் குறித்து நிறுவனங்களுடன் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் கூறியது.

‘சிடிஜி ஸிக்’ செயலியை இயக்கும் சிங்கப்பூரின் மிகப்பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு பயணத்திற்கு 50 காசு அல்லது 80 காசு எனக் கூடுதல் ஓட்டுநர் கட்டணத்தை அறிமுகப்படுத்தியிருந்தது.

$15க்குக் குறைவான கட்டணங்களுக்கு 50 காசு கூடுதல் கட்டணமும் அதற்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு 80 காசு கூடுதல் கட்டணமும் சேர்க்கப்படும் என்று கம்ஃபர்ட்டெல்குரோ ஜூலை 22ஆம் தேதி வெளியிடப்பட்ட மற்றொரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அந்தக் கூடுதல் கட்டணம் அதன் செயலிமூலம் முன்பதிவு செய்யப்படும் பயணங்கள், எல்லைதாண்டிய பயணங்கள், சொகுசு கார் சேவைகள், மணிநேர அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் ஆகியவற்றுக்குப் பொருந்தும்.

கிராப், கோஜெக், டடா ஆகிய நிறுவவங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓட்டுநர்களுக்காக 90 காசு கூடுதல் கட்டணத்தை நடைமுறைப்படுத்தின. டடா நிறுவனம் $18க்கு மேற்பட்ட பயணங்களுக்கு $1.20 கூடுதல் ஓட்டுநர் கட்டணத்தை விதித்தது.

உயர்ந்துவரும் எரிபொருள் செலவுகளைச் சமாளிக்க ஓட்டுநர்களுக்கு உதவும் வகையில், அந்தக் கூடுதல் கட்டணம் முதன்முதலில் 2022ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகச் சங்கம் தெரிவித்தது.

அந்தக் கட்டணங்கள் முழுமையாக ஓட்டுநர்களுக்கே வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்