சிங்கப்பூரில் இருக்கும் 95 விழுக்காடு நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை எனச் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (எஸ்என்இஎஃப்) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதி வரை நடந்த இந்தக் கருத்துக்கணிப்பில், 330 நிறுவனங்களின் முதலாளிகள் கலந்துகொண்டனர்.
நான்கு நாள் வேலை வாரம் குறித்து அவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மேலும், அதை நடைமுறைப்படுத்துவதால் உண்டாகும் சாதக, பாதகங்கள் குறித்து அவர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கும் வகையில் இந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர் இந்த நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று எனக் கூறியதாகவும் இதை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கருத்துக்கணிப்பில் நான்கு நாள் வேலை வாரத்தை ஓர் அட்டவணையாகக் கூட்டமைப்பு வரையறுத்தது. அதில், நான்கு நாள் வேலை வாரத்தில் ஊழியர்கள் மொத்தம் 36 மணி நேரம் பணிபுரிவார்கள் என்றும் அவர்களுக்கு ஐந்து நாள் வேலை வாரத்தில் அதாவது, 44 மணி நேரம் பணிபுரிந்தபோது வழங்கிய அதே ஊதியத்தை நிறுவனம் நான்கு நாள் வேலை வாரத்தில் வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இந்த நடைமுறை சாத்தியமில்லை எனக் கூறிய முதலாளிகளில் 260 பேர் (79 விழுக்காட்டினர்) நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று கூறியுள்ளனர். 16 விழுக்காட்டினர் அது சாத்தியம் இல்லையென்றாலும், நாங்கள் அதைப் பரிசீலிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான நிறுவனங்களின் முதலாளிகள் நான்கு நாள் வேலை வாரத்தைச் செயல்படுத்தத் தயங்குகின்றனர். ஏனெனில், அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதால் இது சாத்தியமில்லை என அவர்கள் கூறியதாகச் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு ஏற்ப உற்பத்தி திறனை மேம்படுத்த முடியாமல் போனது, செலவீன அதிகரிப்பு போன்றவையும் இதற்கு காரணம் என அவர்கள் கூறியதாக அறிக்கை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பல முதலாளிகள் எதிர்கொள்ளும் போட்டி மிகுந்த வர்த்தக சூழலையும் இறுக்கமான ஊழியர் சந்தையின் உண்மை தன்மையையும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு பிரதிபலிப்பதாக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் சிம் கிம் குவான் கூறினார்.
மேலும், “கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 18 விழுக்காட்டினர் மட்டும் இந்த நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் கூறிய காரணங்களில் தங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்த விரும்புவதும் அடங்கும்,” என்றார் அவர்.

