ஏமஸ் யீ மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள்

ஏமஸ் யீ மீது மேலும் நான்கு குற்றச்சாட்டுகள்

2 mins read
8c98eb5b-5ff0-46de-b607-25240054a950
வழக்கிற்கு முந்தைய விசாரணைக்காக ஏமஸ் யீ செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் சிறுவர் பாலியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி, 27 வயது ஏமஸ் யீ மீது மாவட்ட நீதிமன்றத்தில் மேலும் நான்கு புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் அவர் எதிர்கொள்ளும் மொத்த குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இதில் மூன்று குற்றச்சாட்டுகள் தேசிய சேவைச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.

புதிதாகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில், கடந்த ஏப்ரல் மாதம் 7, 11 ஆகிய தேதிகளில் தமது வலைப்பதிவில் இன மோதலைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு அடங்கும். சிங்கப்பூரில் பெரும்பான்மையினரான சீன சமூகத்தால் மலாய்க்காரர்களும் இந்தியர்களும் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்படுவதாகக் கூறிய அவர், அரசாங்கத்துக்கு எதிராகப் போராடுமாறு அவ்விரு சமூகங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், மே மாதம் 27ஆம் தேதியன்று அவர் பதிவேற்றிய காணொளியில், மலாய்/முஸ்லிம் சமூகம் சீனர்களால் கடுமையாகப் பாகுபாட்டிற்கு உள்ளாவதாக குறிப்பிட்டதற்காக மற்றொரு குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

இதுதவிர, தொல்லைகளிலிருந்து பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சிறுவர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் உடையவர்களுக்குப் பேச்சு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பாலியல் உறவு கொள்ள சிறுவர்களாலும் குழந்தைகளாலும் சம்மதம் தெரிவிக்க முடியும் என்றும் யீ வாதிட்டார்.

அத்துடன், சிறுவர்கள் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பான பொருள்களைத் தயாரிப்பதற்கும் அவற்றை வைத்திருக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி அன்றும் அவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 26) யீக்கு $15,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டது. சிறுவர் பாலியல் விவகாரங்கள் குறித்து, பல்வேறு இனத்தவர்களுக்கிடையே கசப்புணர்வைத் தூண்டும் வகையில் இணையத்தில் எதையும் பதிவிடக் கூடாது உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். தொல்லைகளிலிருந்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தேசிய சேவை விதிகளை மீறிய குற்றங்களுக்கு $10,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

இவ்வழக்கு தொடர்பான வழக்கிற்கு முந்தைய விசாரணைக்காக அவர் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

குறிப்புச் சொற்கள்
ஏமஸ் யீகுற்றச்சாட்டுஇனம்பாலியல்