புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) இரு கார்கள், இரு லாரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் காயமுற்ற நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து இரவு 9.55 மணியளவில் தங்களுக்கு அழைப்பு வந்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
காரை ஓட்டிய 53 வயது ஆடவர், லாரியை ஓட்டிய 37 வயது ஆடவர், காரை ஓட்டிய 31 வயது ஆடவர், காரில் இருந்த 39 வயது பயணி ஆகியோர் இந்த விபத்தில் காயமுற்றனர். கூ டெக் புவாட் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாகக் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
இந்த விபத்து தொடர்பில் லாரியை ஓட்டிய 34 வயது ஆடவர் விசாரணைக்கு உதவி வருவதாகக் காவல்துறை சொன்னது.
இந்த விபத்துக்குப் பிந்தைய நிலவரத்தைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. சனிக்கிழமை காலை அது பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து 28,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. விரைவுச்சாலையின் இடது தடத்தில் இரு கார்களும் இரு லாரிகளும் வரிசையாக இருந்தன. அவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதாகத் தெரிகிறது.