திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, ரிடவ்ட் ரோடு பங்களாக்களின் வாடகை குறித்து திரு கா. சண்முகம், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உட்பட நான்கு அமைச்சர்கள் அறிக்கை வெளியிடுவார்கள்.
மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன், ரிடவ்ட் ரோடு எண் 26, 31 பங்களாக்களின் வாடகை தொடர்பிலான மறுஆய்வு பற்றி பேசுவார்.
இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் டொங், அரசாங்கச் சொத்துகளின் வாடகை குறித்து பேசுவார்.
சட்ட, உள்துறை அமைச்சர் திரு சண்முகமும், வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் தனித்தனி அறிக்கைகளை வெளியிடுவர்.
திரு சண்முகமும் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் ரிடவ்ட் ரோடு பங்களாக்களை வாடகைக்கு எடுத்ததன் தொடர்பிலான விசாரணையின் முடிவை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு ஜூன் 28ம் தேதி வெளியிட்டது. இரு அமைச்சர்களும் ஊழல் அல்லது குற்றம் புரிந்ததாக எந்தவோர் ஆதாரமும் காட்டவில்லை என விசாரணையின் முடிவு தெரிவித்தது.
அதே நாளில் மூத்த அமைச்சர் வெளியிட்ட அறிக்கை, இரு பரிவர்த்தனைகளிலும் இரு அமைச்சர்களும், அரசாங்க அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட தனியார் துறையினரும் முறையாக நடந்து கொண்டதாகக் கூறியது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்திருக்கும் 23 கேள்விகளுக்கு அமைச்சர்நிலை அறிக்கைகள் பதிலளிக்கும்.
பங்களாக்கள் எந்தச் சூழ்நிலையில் அமைச்சர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது, அவற்றை சிங்கப்பூர் நில ஆணையம் எவ்வாறு விளம்பரப்படுத்தியது என்பது பற்றி திரு ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் (சுவா சூ காங் குழுத்தொகுதி) கேள்விகள் கேட்டிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
ஏலக்குத்தகையில் பங்கெடுக்கும் ஒருவருக்கு மற்றவரைவிட அதிக சாதகம் வழங்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் உள்ளன என்று திரு முரளி பிள்ளை (புக்கிட் பாத்தோக்) கேள்வி எழுப்பியுள்ளார்.
பொத்தோங் பாசிர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சித்தோ யீ பின், நில ஆணையத்தின் வழக்கமான வாடகை நடைமுறைகள் என்ன என்றும், ஆணையம் அவற்றைப் பின்பற்றியதா என்றும், வாடகைக் கட்டணங்கள் என்ன என்றும் கேட்டிருக்கிறார்.
சிங்கப்பூரில் இதுபோல் எத்தனை பங்களாக்கள் இருக்கின்றன, அவற்றின் வாடகை தனியார் சந்தைக்கு நிகரானதா, வாடகைக்குள்ள பங்களாக்கள் அனைத்தையும் வெளிப்படையாகப் பட்டியலிடும் நடைமுறை நடப்பில் உள்ளதா எனத் திரு டோன் வீ (சுவா சூ காங் குழுத்தொகுதி) கேள்விகள் கேட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரும் பாட்டாளிக் கட்சித் தலைவருமான திரு பிரித்தம் சிங், இரு அமைச்சர்களுக்கும் பங்களாக்களின் குத்தகை பற்றி தனிப்பட்ட முறையில் தகவல் எதுவும் கிடைக்காமலிருப்பதை அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தும் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதோடு, பங்களாக்கள் அமைச்சர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டபோது நில ஆணையம் நிர்ணயித்திருந்த வழிகாட்டி வாடகை என்ன என்றும் கேட்டிருக்கிறார்.
காலனித்துவ பங்களாக்கள் அமைந்திருக்கும் நிலத்தில் மேலும் பல பகுதிகளை அதிக பயன்மிக்கத் தேவைகளுக்குப் பயன்படுத்த திட்டங்கள் உள்ளதா என திரு ஜெரால்டு கியாம் (அல்ஜூனிட் குழுத்தொகுதி) கேட்டிருக்கிறார்.
இந்த விவகாரத்தின் மறுஆய்வை உச்சநீதிமன்ற நீதிபதி போன்ற வேறு அரசாங்கப் பிரிவிடம் ஒப்படைக்காமல் மூத்த அமைச்சர் டியோவிடம் ஒப்படைத்ததற்குத் தொகுதி இல்லா நாடாளுமன்ற உறுப்பினர் லியோங் மன் வாய் காரணம் கேட்டிருக்கிறார்.