பணிப்பெண்ணைக் கீறி, அறைந்து, குத்திய மாதுக்கு நான்கு மாதச் சிறை

பணிப்பெண்ணைக் கீறி, அறைந்து, குத்திய மாதுக்கு நான்கு மாதச் சிறை

1 mins read
0e3418e0-bc7d-44f1-adf8-04606b408cc8
அரசு நீதிமன்ற வளாகத்தில் ஹேசல் ஃபாங் ஃபோங் யென். - படம்: ஷின் மின்
Google News Preferred Icon

இல்லப் பணிப்பெண்ணின் வேலைத்திறனில் அதிருப்தி அடைந்த மாது ஒருவர், மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்தப் பணிப்பெண்ணைத் தொடர்ச்சியாகப் பலமுறை தாக்கியுள்ளார். இதனால் அப்பணிப்பெண்ணின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் உடலின் பல இடங்களிலும் காயங்கள் ஏற்பட்டன.

ஹேசல் ஃபாங் ஃபோங் யென் என்ற அந்த மாதின் கொடுமைகள், அவரின் சகோதரர் மூலம் வெளிச்சத்திற்கு வந்தன. பணிப்பெண்ணுக்கு ரத்தம் வடிவதைக் கண்டதாகத் தம் மகள் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, அச்சகோதரர் பணிப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

மான் சியான் ஹோய் சிங் என்ற 27 வயதுப் பணிப்பெண்ணைத் தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட 67 வயது ஃபாங்கிற்கு புதன்கிழமை (ஜூன் 24) நான்கு மாதச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்பணிப்பெண்ணுக்கு இழப்பீடாக $4,440 செலுத்துமாறும் ஃபாங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தொகையை அவர் செலுத்தத் தவறினால், கூடுதலாக நான்கு வாரச் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

2022 டிசம்பர் 27ஆம் தேதி, இல்லப் பணிப்பெண்கள் நிலையத்தின் ஊழியர்கள் வழக்கமான விசாரணை அழைப்பின் மூலம் அப்பணிப்பெண்ணைத் தொடர்புகொண்டனர். அப்போது, ஃபாங் தம்மைத் தாக்கியதாக அந்த ஊழியரிடம் அப்பணிப்பெண் தெரிவித்தார்.

இதையடுத்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டு, 2025 செப்டம்பர் 9ஆம் தேதி ஃபாங் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கான காரணங்கள் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
சிறைபணிப்பெண்கொடுமை