முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சரும், தற்காப்பு மூத்த அமைச்சரும், மெண்டாக்கி அமைப்பின் தலைவருமான ஸாக்கி முகம்மது, மெண்டாக்கி அமைப்பின் இயக்குநர் சபைக்கு நான்கு புதிய உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
மெண்டாக்கியின் தலைமைத்துவ மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்ட இயக்குநர்களில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
கல்வி, மற்றும் தேசிய வளர்ச்சி அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சையது ஹருன் அல்ஹப்ஷி, வெஸ்ட் கோஸ்ட் - ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹமீது ரசாக், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்லினா அப்துல் ஹலீம், ‘டெலாய்ட் சிங்கப்பூர்’ நிறுவனத்தின் மேலாண்மைப் பங்குதாரர் திரு ஷாரிக் பர்மாகி ஆகியோர் ஆகஸ்ட் 21 முதல் பொறுப்பேற்றுக்கொண்டனர் என்று மெண்டாக்கி செய்தியறிக்கை குறிப்பிட்டது.
இப்புதிய நியமனங்கள் குறித்துப் பேசிய திரு ஸாக்கி, மெண்டாக்கி அமைப்பின் தலைமைத்துவ புதுப்பித்தலுக்கு இது ஒரு முக்கிய சான்றாகும் என்றார்.
மலாய்/முஸ்லிம் சமூகத்தின் கல்வி, சமூகத் தேவைகளுக்கு ஏற்ப அமைப்பின் சேவைகளை மேலும் வலுப்படுத்த இப்புதிய தலைவர்களின் அனுபவங்களும் புதிய தொலைநோக்குப் பார்வைகளும் பெரிதும் உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு ஷாரில் தாஹா, திருவாட்டி மரியம் ஜாஃபர், நீண்ட காலம் சேவையாற்றிய திரு சலீம் அப்துல் காதிர் ஆகிய மூவர் தங்களது பதவிக் காலத்தை நிறைவு செய்து வாரியத்திலிருந்து விலகியுள்ளனர்.
அவர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அமைச்சர் ஸாக்கி, புதிய இயக்குநர் சபை சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றும் எனக் குறிப்பிட்டார்.


