சிங்கப்பூரில் சட்டவிரோதமாகத் தங்கிய மூவர் கைது

1 mins read
9e647a30-14a4-440b-b6a4-c9d5a1f59e1e
சட்டவிரோதமாகத் தங்கிய மூவர் கைது செய்யப்பட்டனர். - படம்: ஐசிஏ

சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் சட்டவிரோதமாகத் தங்கிய மூவர் ஜூரோங் வெஸ்ட்டில் டிசம்பர் 16ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர்க் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) தனது ஃபேஸ்புக் பதிவில் இத்தகவலை வியாழக்கிழமை (டிசம்பர் 18) வெளியிட்டது.

இந்த அமலக்க நடவடிக்கையில் ஓர் இந்திய நாட்டவர், ஒரு பிலிப்பீன்ஸ் நாட்டவர், ஒரு நேப்பாளப் பெண் உள்ளிட்டோர் கைதாயினர். அவர்கள் 26 முதல் 35 வரையிலான வயதுடையவர்கள்.

மூவரும் காலாவதியான சமூக வருகை விசாவை வைத்திருந்தனர். அது மட்டுமல்லாமல் உரிய வேலை அனுமதிச் சீட்டு இல்லாமல் அவர்கள் சட்டவிரோதமாக வேலை பார்த்ததாகவும் நம்பப்படுவதாக ஐசிஏ தெரிவித்தது.

நான்காமவர், 29 வயது இந்திய நாட்டவர். இவர், கைதான மூவரையும் சட்டவிரோதமாக தங்க அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. அவரது வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது மூவரும் தங்கியிருப்பது தெரிய வந்தது.

சிங்கப்பூரின் சட்டப்படி, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $6,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

இந்தச் சம்பவம் பற்றிய ஐசிஏயின் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்