சிங்கப்பூரில் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில், அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறி அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய நான்கு கனரக வாகன ஓட்டுநர்கள்மீது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
முதல் சம்பவம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்தது. அதில் 32 வயது ஆடவர் ஒருவர், புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிய சிலேத்தார் விரைவுச்சாலையில் பேருந்துக்கு அனுமதிக்கப்பட்ட 60 கிலோமீட்டர் வேக வரம்பை மீறி, மணிக்கு 73 கிலோமீட்டர் வேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றபோது பிடிபட்டார்.
அந்த ஆடவர் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்தில், அதாவது மே மாதம் 4ஆம் தேதி, அதே சாலையில் மீண்டும் அதே தவற்றைப் புரிந்தார்.
அடுத்த சம்பவம் 2025 ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. ஈஸ்ட் கோஸ்ட் விரைவுச்சாலையை நோக்கிய ஷியர்ஸ் அவென்யூவில் 37 வயது ஆடவர் ஒருவர், சிமெண்ட் கலவை வாகனத்துக்கு அனுமதிக்கப்பட்ட 40 கிலோமீட்டர் வேக வரம்பை மீறி, மணிக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்று பிடிபட்டார்.
மூன்றாவது சம்பவமாக, 2026ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி நகர்ப்பகுதியை நோக்கிய ஆயர் ராஜா விரைவுச்சாலையில், 47 வயது ஆடவர் ஒருவர் பேருந்துக்குரிய 60 கிலோமீட்டர் வேக வரம்பை மீறி, மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்றது பதிவு செய்யப்பட்டது.
நான்காவது சம்பவத்தில், ஜூலை மாதம் 15ஆம் தேதி சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிய மத்திய விரைவுச்சாலையில், 37 வயது ஆடவர் ஒருவர் பேருந்துக்குரிய 60 கிலோமீட்டர் வேக வரம்பை மீறி, மணிக்கு 89 கிலோமீட்டர் வேகத்தில் பேருந்தை ஓட்டிச் சென்று கைதானார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் $1,000 வரை அபராதம், மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மீண்டும் அதே குற்றம் புரிவோருக்குப் பெறப்படும் தண்டனை $2,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மேலும், குற்றவாளிகள் அனைத்துப் பிரிவு வாகனங்களையும் ஓட்டுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படும் சூழலையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
