குடிநுழைவுக் குற்றவாளிகளுக்குத் தங்குமிடம், வேலை வழங்கியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

குடிநுழைவுக் குற்றவாளிகளுக்குத் தங்குமிடம், வேலை வழங்கியதாக நால்வர் மீது குற்றச்சாட்டு

2 mins read
மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் வெளிநாட்டவர்
53a03a00-20d3-40a2-9bb5-2395ca50b91c
குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு வேலை, தங்குமிடம் தருவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் எச்சரித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

குடிநுழைவுச் சட்டங்களை மீறி நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினருக்குத் தங்குமிடம் அளித்ததாகவும் அவர்களுக்கு வேலை வழங்கியதாகவும் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் வியாழக்கிழமை (ஜூலை 30) நால்வர்மீது குற்றம் சாட்டியுள்ளது. அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள், ஒருவர் வெளிநாட்டவர்.

58 வயது சிங்கப்பூரரான தாமஸ் லீ கும் சுவென், வேலை அனுமதி அட்டை காலாவதியான பிறகும் சியாவ் ஷுஃபாங் எனும் 49 வயது சீனப் பெண்ணைப் பகுதிநேரத் தூய்மைப் பணியாளராக வேலைக்கு அமர்த்தியிருந்தார். 76 வயது சிங்கப்பூரரான ஃபூ செர் ஃபட், தகுந்த சோதனையின்றி அப்பெண்ணுக்குத் தன் வீட்டில் தங்குமிடம் அளித்தார். விசாரணைக்குப்பின் அப்பெண்ணுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்றிய பின்னர் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்ட அவர் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

இந்திய நாட்டவரான 34 வயது துரைராஜ் சிங்கமுத்து, வருகை அனுமதி அட்டை காலாவதியான கிருஷ்ணகுமார் ரவி எனும் 39 வயது இந்தியருக்கு விநியோக உதவியாளராக வேலை அளித்தார். கிருஷ்ணகுமாருக்கு ஆறு வாரச் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டார். மேலும், அவர் சிங்கப்பூருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது.

51 வயது சிங்கப்பூரரான யான் முன் வாய், லெய்லானி ரகாசா அலோக் எனும் 42 வயது பிலிப்பீன்ஸ் பெண்ணுக்குத் தங்குமிடம் அளித்தார். வருகை அட்டை காலாவதியான பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அப்பெண்ணுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனையும் $2,000 அபராதமும் விதிக்கப்பட்டு, தண்டனையை நிறைவேற்றிய பிறகு அவர் தாய்நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

குடிநுழைவுக் குற்றவாளிகளுக்கு வேலை, தங்குமிடம் தருவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது. அத்தகையோர்க்கு அதிகபட்சமாக ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் $6,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோதக் குடியேறிகளுக்கு வீடுகளை வாடகைக்கு விடுவதைத் தவிர்க்க, உரிமையாளர்கள் அவர்களின் குடிநுழைவு ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூரர்வெளிநாட்டவர்குற்றச்சாட்டுகுடிநுழைவுசோதனைச் சாவடிஆணையம்