ஒரே வாரத்தில் நான்கு முயல்கள் கைவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுவதாக விலங்குவதை தடுப்புச் சங்கம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) தெரிவித்தது.
புக்கிட் பாஞ்சாங்கில் ஸெங்ஹுவா இயற்கைப் பூங்காவில் நவம்பர் 29ஆம் தேதி இரு முயல்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தனக்கு முதலில் தெரியப்படுத்தப்பட்டதாக சங்கம் அதன் ஃபேஸ்புக் பதிவில் கூறியது.
தனியார் முயல் மீட்புக் குழுவான Bunny Wonderland-ஐ சேர்ந்த விலங்கு மீட்பு அதிகாரியும் தொண்டூழியர்களும் அந்த முயல்களை மீட்டதாக சங்கம் சொன்னது.
அவை அந்தக் குழுவின் பராமரிப்பில் வைக்கப்பட்டன.
டிசம்பர் 3ஆம் தேதி வேறொரு சம்பவத்தில், அங் மோ கியோவில் இரு முயல்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
புளோக் 407 அங் மோ கியோ அவென்யூ 10ல் கண்டெடுக்கப்பட்ட அந்த முயல்கள், பயத்துடனும் கடுமையான தோல் பிரச்சினைகளுடனும் காணப்பட்டதாகச் சங்கம் கூறியது.
சங்கத்தின் மருந்தகத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த முயல்களுக்கு சொறிச் சிரங்கு (scabies) இருந்தது கண்டறியப்பட்டது.
பரிசோதனையின்போது அந்த முயல்களில் ஒன்றுக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மடிந்துவிட்டதாகவும் மற்றொன்று டிசம்பர் 10ல் மடிந்ததாகவும் சங்கம் தெரிவித்தது.