மரினா பே சேண்ட்சின் தாய் நிறுவனமான லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மரினா பே சேண்ட்சில் நான்காவது கட்டடம் கட்ட கிட்டத்தட்ட 10.6 பில்லியன் வெள்ளி தேவைப்படும் என்று தெரிவித்துள்ளது. அது இதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட செலவுத்திட்டத்தை விட இரட்டிப்பாக மாறியுள்ளது.
நான்காவது கட்டடம் ‘மரினா பே சேண்ட்ஸ் ஐஆர்2’ என்று அழைக்கப்படுகிறது. அதில் 570 ஹோட்டல் அறைகள், சொகுசான விளையாட்டு இடங்கள், மாடியில் கூரை, 15,000 சதுர அடியில் கேளிக்கை இடம் போன்றவை இடம்பெறுகின்றன.
மேலும் அங்கு வர்த்தகக் கூட்டங்கள், மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்த இடம், புதிய உணவு மற்றும் பானக்கூடம் போன்றவையும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடம் கட்ட 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 பில்லியன் வெள்ளி செலவாகலாம் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் இப்போது 10 பில்லியன் வெள்ளியாகலாம் என்று லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கட்டுமானத்திற்கு மட்டும் 6 பில்லியன் வெள்ளி, நிலத்தின் விலை 2.5 பில்லியன் வெள்ளி, கட்டடம் திறப்பதற்கு முன்னர் ஏற்படும் செலவுகளுக்கு 2 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் சொகுசு தொடர்பான சுற்றுப்பயண நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அது வளர்ச்சி பெறும் துறையாகவும் உள்ளது, அதனால் இந்த முதலீட்டு நடவடிக்கையில் இறங்குவதாக லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் தெரிவித்தது.
செலவில் 25 முதல் 35 விழுக்காடு வரை லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஏற்றுக்கொள்ளும் என்றும் மற்ற செலவுகளுக்கான நிதியை அதன் பங்காளிகளிடம் இருந்து அது பெறும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உலகின் சிறந்த ஹோட்டல், சேவை, அனுபவம் உள்ளிட்டவற்றை இந்தக் கட்டடம் தரும் என்ற நோக்கத்தில் இதை கட்டுவதாக லாஸ் வேகாஸ் சேண்ட்ஸ் தெரிவித்தது.
கட்டடம் ஜூன் 2025ஆம் ஆண்டு தொடங்கி 2030ஆம் ஜுன் மாதத்தில் நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.

