கப்பே‌‌ஜ் டெரசை $175 மில்லியனுக்கு வாங்கியது ஃபிரேசர்ஸ் புரோப்பர்ட்டி

கப்பே‌‌ஜ் டெரசை $175 மில்லியனுக்கு வாங்கியது ஃபிரேசர்ஸ் புரோப்பர்ட்டி

2 mins read
03d597c5-ced8-44ab-b38d-429ff99e4396
கப்பேஜ் டெரசின் முகப்புப் பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஃபிரேசர்ஸ் புரோப்பர்டி நிறுவனம், ஆர்ச்சர்ட் ரோடு பகுதியில் உள்ள 17 பாரம்பரிய கடைவீடுகளைக் கொண்ட ‘கப்பேஜ் டெரஸ்’ எனும் சொத்தை $175 மில்லியனுக்கு வாங்கியுள்ளது.

இந்தச் சொத்து பெரனாக்கன் பாணி கடைவீடுகளுடன் கூடிய தனித்துவமான வாழ்க்கைமுறை பகுதி என்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட அறிக்கையில் ஃபிரேசர்ஸ் தெரிவித்தது. மேலும் அது, உணவு, பானம், பொழுதுபோக்கு, இரவுநேரக் கேளிக்கை நடவடிக்கைகள் கொண்ட துடிப்பான ஒரு கலவை என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

கப்பேஜ் டெரசின் மொத்தப் பரப்பளவு, வெளிப்புற உணவருந்தும் பகுதியைத் தவிர்த்து, 34,678 சதுர அடி. மேலும் இதன் 99 ஆண்டு குத்தகைக்காலத்தில் 62 ஆண்டுகள் எஞ்சியுள்ளன. இது ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள ஃபிரேசர்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் சொத்தான ‘த சென்டர் பாயின்ட்’ வணிக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

இவ்வாண்டு பிப்ரவரியில் சென்டர் பாயின்ட்டின் பின்புறக் குத்தகை நிலப்பகுதியை $391.9 மில்லியனுக்கு வாங்குவதற்கான கூட்டு விற்பனை ஒப்பந்தப் புள்ளியை அந்நிறுவனம் வெற்றிகரமாகப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஃபிரேசர்சின் அண்மை நடவடிக்கை வந்துள்ளது.

சென்டர் பாயின்ட்டின் முன்புற நிலப்பகுதியில் ஃபிரேசர்ஸ் பெரும்பான்மை பங்குதாரராக உள்ளது. அத்துடன், கட்டடப் பரப்பளவின்படி, அதன் சில்லறை விற்பனைக் கடைகளில் 96 விழுக்காட்டை அது கைவசம் வைத்துள்ளது.

மேலும், சென்டர் பாயின்ட்டுடன் நேரடியாக இணைக்கப்பட்ட 10 தளங்களைக் கொண்ட அலுவலகக் கட்டடமான ‘51 கப்பேஜ் ரோடு’ சொத்தும் ஃபிரேசர்சுக்கே சொந்தமானது.

ஃபிரேசர்ஸ் புரோப்பர்ட்டி சிங்கப்பூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூன் சு லின் அண்மை நடவடிக்கை குறித்துப் பேசினார்.

“அருகிலுள்ள இடங்களுக்கு இடையே ஒருங்கிணைந்த பலனை உருவாக்கவும் ஆர்ச்சர்ட் ரோட்டின் தற்போதைய மறுசீரமைப்பிற்குப் பங்காற்றும் வகையில் எங்களின் சொத்துகளைச் சிறந்த முறையில் நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எங்களுக்குத் துணையாக இருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

வணிக வட்டாரத்தைப் புதுப்பிக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப, ஆர்ச்சர்ட் ரோட்டில் சொத்துகளை மேம்படுத்துவதற்கான நீண்டகால வாய்ப்புகளைத் தொடர்ந்து ஆராயப்போவதாக நிறுவனம் கூறியது.

குறிப்புச் சொற்கள்