மோசடியில் $5 மி. இழப்பு: 239 பேர் காவல்துறையால் கைது

1 mins read
46a86994-140b-49c2-8620-c57420eb9786
காவல்துறை டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை நடத்திய சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

டிசம்பர் மாதத்தில் இரண்டு வாரங்கள் நீடித்த மோசடிக் குற்றங்களுக்கான சோதனைகளில் 239 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று வியாழக்கிழமை (டிசம்பர் 18) காவல்துறை அறிக்கை வெளியிட்டது.

வர்த்தகக் குற்றப்பிரிவும் காவல்துறையின் வட்டாரப் பிரிவுகள் ஏழும் அந்த நடவடிக்கைகளில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் 18ஆம் தேதி வரை ஈடுபட்டன.

கைதுசெய்யப்பட்டோர், சுமார் $5 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள மோசடிக் குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின்பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் வயது 16 முதல் 78 வரை என்று தெரிவிக்கப்பட்டது. 600க்கும் மேற்பட்ட முறைகேடான பணப் பரிவர்த்தனைகளில் இடைத் தரகர்களாக அவர்கள் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

நண்பர்களாக நடிப்பது, அரசாங்க அதிகாரிகள்போல வேடமிடுவது, வேலை வாய்ப்பு தருவதாக ஏமாற்றுவது, வீட்டு வாடகை, முதலீடுகள் செய்வது போன்ற பல வர்த்தக மோசடிகளில் அவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

கள்ளப் பணம் வைத்திருத்தல், உரிமம் அற்ற கட்டணச் சேவை வழங்குவது போன்ற குற்றங்களுக்கும் விசாரணை நடந்துவருகிறது.

மோசடிகளில் சம்பந்தப்பட்டோரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் ஒருசேர விதிக்கப்படலாம்.

குற்றவியல் சட்டத்தில் கடந்த நவம்பர் நான்காம் தேதி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் மோசடிக் குற்றவாளிகளுக்கு பிரம்படியும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்