சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு நாடிய 30க்கும் மேற்பட்டோருக்கு உதவுவதாகக் கூறி ஏமாற்றியதாக ஒரு மலேசிய மாதின்மீது நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மோசடி குற்றஞ்சாட்டப்பட்டது.
அவ்வாறு வேலை தேடியோரில் ஒருவரிடம் இவ்வாண்டு ஜூன் மாதம் $15,000ஐ தமது சொந்த வங்கிக் கணக்கில் மாற்றிவிடத் தூண்டியதாக குவா சொக் இயேன் என்ற அந்த 42 வயது பெண்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏமாற்றப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பை வெளியிடாமல் அது தெரிவிக்கப்படாத காரணங்களுக்குச் செலவிடப்பட்டதாகவும் காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
அதே ஜூன் மாதம் இந்தச் சம்பவங்கள் குறித்து கிடைத்த தகவல்களைக் கொண்டு, வியாழக்கிழமை (நவம்பர் 26) காவல்துறை அந்த மாதைக் கைது செய்தது.
ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை, பிரம்படி அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்படுவதில்லை.
