மோசடி: 259 பேரிடம் காவல்துறை விசாரணை

மோசடி: 259 பேரிடம் காவல்துறை விசாரணை

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Sep 2026 - 7:15 pm

2 mins read

ஏறக்குறைய $5.2 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 259 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 23 வரை மேற்கொள்ளப்பட்ட இருவார நடவடிக்கைக்குப் பிறகு, 16 முதல் 82 வயதுக்குட்பட்ட 181 ஆண்களும் 78 பெண்களும் பிடிபட்டதாக வியாழக்கிழமை (செப்டம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் மோசடிக்காரர்களாகவோ கள்ளப் பணத்தைக் கைமாற்றிவிடுபவர்களாகவோ 648க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்த ஏமாற்று வேலைகளில் முக்கியமாக மின்வணிகம், மோசடி மின்னஞ்சல், வேலை, முதலீடு, அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடிகள், அரசாங்க அதிகாரிகளைப்போல் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகியவை அடங்கும்.

மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது, உரிமமில்லாத கட்டணச் சேவைகளை வழங்கியது ஆகியவற்றில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் அந்த 259 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மோசடிக்காரர்கள், மோசடிக் கும்பல் உறுப்பினர்கள், ஆள் சேர்ப்பவர்கள் ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு ஆறு முதல் 24 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.

மோசடிப் பணத்தை நல்ல பணமாக்குவதன் மூலமோ, சிம் அட்டைகளை அல்லது சிங்பாஸ் விவரங்களை வழங்குவதன் மூலமோ மோசடிக்காரர்களுக்கு உதவுவோர்க்கு 12 பிரம்படிகள் வரை விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தைக் கைமாற்றிவிடுவது தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் வங்கிச் சேவைகள், கைப்பேசி இணைப்புச் சந்தாக்கள் மீதான கட்டுப்பாடுகளையும் சந்திக்க நேரிடலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, www.scamshield.gov.sg என்ற இணையத்தளத்திற்குச் செல்லலாம் அல்லது 1799 என்ற ‘ஸ்கேம்ஷீல்டு’ உதவி எண்ணை அழைக்கலாம்.

குறிப்புச் சொற்கள்
மோசடிதண்டனைகாவல்துறை