இந்த ஆண்டில் புதிதாக கிளம்பியுள்ள காப்புறுதி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. சிங்கப்பூரில் நடக்கும் ஆக அதிக மோசடிகளின் வரிசையில் அது எட்டாவது இடத்தில் உள்ளது.
இதுவரை 791 புகார்கள் செய்யப்பட்டுள்ளதோடு, 2025ஆம் ஆண்டின் முதற்பாதியில் மட்டும் $21 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை மக்கள் காப்புறுதி மோசடிகளில் இழந்துள்ளனர்.
ஆண்டின் மத்தியில் நடந்த மோசடிகளின் விவரங்களை ஆகஸ்ட் மாதத்தில் காவல்துறை வெளியிட்டபோது இது தெரியவந்தது. ஒவ்வொரு சம்பவத்திலும் சுமார் $27,000 ஏமாற்றப்பட்டது. மோசடிக்குள்ளான பத்து பேரில் மூவர் 65 வயதுக்கு மேற்பட்டோர் ஆவர்.
ஆண்டின் முதற்பாதியில் அதிக வாடிக்கையாளர்கள் காப்புறுதி மோசடி பற்றிய புகார் அளித்ததாக ‘இன்கம் இன்ஷுரன்ஸ்’ நிறுவனம் கூறியது. காப்புறுதி நிறுவன ஊழியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மோசடிக்காரர்கள் மக்களைத் தொடர்புகொள்வர். புதிய அல்லது காலாவதியாகி புதுப்பிக்கப்படவிருக்கும் காப்புறுதி திட்டங்களுக்கு கட்டணங்கள் நிலுவையில் இருப்பதாகக் கூறி அவர்கள் பாதிக்கப்பட்டோரை ஏமாற்றுவர்.
கூடுதல் கட்டணங்களை தவிர்க்கவேண்டுமென்றால், காப்புறுதி திட்டம் கைவிடப்படவேண்டும் என்று மோசடிக்காரர்கள் பொய் கூறுவர். பிறகு, மற்றொரு மோசடிக்காரரிடம் தொலைபேசி அழைப்பு மாற்றிவிடப்படும். காப்புறுதி திட்டத்தை ரத்து செய்ய வங்கிக் கணக்கின் விவரங்களை தெரிவிக்குமாறு மோசடிக்கார்கள் வற்புறுத்துவர்.
பாதிப்படைந்தோரில் சிலர், அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்வோரிடம் மாற்றவிடப்படுவர். பணமோசடி நடவடிக்கையில் அவர்களின் வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டுவர்.
‘விசாரணைக்கு’ உதவும்படி, பாதிப்படைந்தோரை மோசடிக்காரர்கள் கேட்டுக்கொள்வர். அதன்படி, பணத்தை குறிப்பிட்ட கணக்குக்கு மாற்றிவிடும்படியும், ‘விசாரணை’ முடிவடைந்ததும் அந்தப் பணம் திரும்பத் தரப்படும் என்று உறுதியளிக்கப்படும் என இன்கம் காப்புறுதி நிறுவனத்தின் பேச்சாளர் விளக்கினார். ஆனால் பணம் அந்த குறிப்பிட்ட கணக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டதும், மோசடிக்காரர்கள் மாயமாக மறைந்துவிடுவர் எனவும் அவர் கூறினார்.
இதுபோன்ற ஒரு மோசடி முயற்சியை டிபிஎஸ் வங்கி அதிகாரிகள் முறியடித்துள்ளனர். சவுத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள டிபிஎஸ் வங்கிக் கிளைக்கு அக்டோபர் 16ஆம் தேதியன்று சுமார் 70 வயது நிரம்பிய மாது, அவசரமாக நுழைந்து $40,000 பணம் அனுப்ப உதவி கோரினார். வங்கி அதிகாரி கேரன் டியோவும் அவரது மேலதிகாரி லோ பீ பெங் இருவரும் மேற்கொண்ட விசாரணையில் அம்மாது வழங்கிய விவரங்களும் பதட்டமும் சந்தேகத்தை எழுப்பியது. இறுதியில் அவர் மோசடிக்குள்ளாகவிருப்பது தெரியவந்தது. பணத்தை அனுப்பும் முடிவிலிருந்து மாது தடுக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகாரபூர்வ வழிகளில் காப்புறுதி சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு காணும்படி காப்புறுதி நிறுவனங்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

