சாலைப் போக்குவரத்து தொடர்பான கட்டண மோசடி குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்து உள்ளது.
அந்தக் கட்டணம் பாக்கி இருப்பதாகத் தெரிவிக்கும் குறுந்தகவல் ஏதும் கிடைக்கப்பெற்றால் அது மோசடி குறுந்தகவலாக இருக்கும் என்று ஆணையம் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளது.
அத்தகைய குறுந்தகவலை ஆணையம் தான் அனுப்பவில்லை என்றும் அதுபோன்ற மோசடிகள் மீண்டும் பரவி வருவதாகவும் அது தெரிவித்தது.
செலுத்தப்படாமல் கட்டணப் பாக்கி இருப்பதாகவும் அதனை உடனே செலுத்துமாறும் கேட்டு இணைப்பு ஒன்று அந்தக் குறுந்தகவலில் இடம்பெற்று இருக்கும் என்றும் அந்த இணைப்பைச் சொடுக்க வேண்டாம் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டு உள்ளது.
கட்டணம் செலுத்துமாறு குறுந்தகவலையோ இணைப்பையோ தான் அனுப்புவதில்லை என்றும் தான் அனுப்பும் மற்ற எல்லா குறுந்தகவல்களிலும் அனுப்பியவரின் பெயரில் gov.sg என்பது இடம்பெற்று இருக்கும் என்றும் அது விளக்கி உள்ளது.
தங்களுக்குச் சம்பந்தமில்லாத குறுந்தகவலையோ மின்னஞ்சல் இணைப்பையோ சொடுக்க வேண்டாம் என்றும் தங்களது சொந்தத் தகவலையோ ஒருதடவைக்கான மறைச்சொல்லையோ யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் ஆணையம் நினைவூட்டி உள்ளது.
மேலும், தங்களுக்கு வந்த தகவல் உண்மையானதுதானா என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும் மோசடிப் பரிவர்த்தனைகள் பற்றி வங்கியிடமும் காவல்துறையிடமும் தெரிவிக்க வேண்டும் என்றும் அது தெரிவித்து உள்ளது.