மோசடியில் ஏமாந்தவரின் கடன்பற்று அட்டையைப் பயன்படுத்தி, சிங்கப்பூரில் $30,000 மதிப்புள்ள ஆடம்பரப் பொருள்களை வாங்கிய சம்பவத்தில் இரண்டாவது தைவானிய ஆடவருக்கு ஈராண்டு, நான்கு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லு மின்-டா, 25, எனப்படும் அவர் $19,000க்கும் மேற்பட்ட தொகை சம்பந்தப்பட்ட மோசடிச் சம்பவங்களில் தம் மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதர ஏழு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதே மோசடிக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட இவரது நண்பர் லு-டிங் என்பவருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை விதிக்கப்பட்டது.
புதன்கிழமை (பிப்ரவரி 11) அன்று விதிக்கப்பட்ட அதே ஈராண்டு, நான்கு மாத சிறைத் தண்டனை அவருக்கும் அப்போது விதிக்கப்பட்டது.
அந்த இரு தைவானிய ஆடவர்களும் மோசடிக் கும்பலுடன் இணைந்து செயல்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருவரும் பல்லாண்டுகளாக ஒருவரை ஒருவர் அறிந்தவர் என்றபோதிலும் இருவருக்கும் இடையிலான உறவு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் தகவல் இல்லை.
மோசடிக் குற்றங்களுக்கு அவர்கள் இருவரும் ஏழு கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இணைய வர்த்தக மோசடிகளில் சிக்கியோருக்குச் சொந்தமானவை அந்த அட்டைகள்.
மோசடியில் பெற்ற கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரில் ஆடம்பரப் பொருள்களை வாங்கி தைவானில் விற்பது குற்றக்கும்பலின் திட்டம்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிறரின் கடன்பற்று அட்டைகளைப் பயன்படுத்தி ஆடம்பரப் பொருள்களை வாங்கிய இருவரும் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் கைது செய்யப்பட்டனர். அப்போது $30,000க்கும் மேற்பட்ட மதிப்புடைய ஆடம்பரப் பொருள்களைக் காவல்துறையினர் அவ்விருவரிடம் இருந்தும் கைப்பற்றினர்.
இருவர் மீதும் 2025 ஏப்ரல் 4ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டது.

