சிங்கப்பூரில் கணக்கியல் மற்றும் நிதித் துறைகளில் உள்ள 60,000 நிபுணர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்வர்.
மோசடியைக் கண்டறிதலைத் தானியக்கமாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்த அவர்கள் தெரிந்துகொள்வர்.
மேலும், தணிக்கைக்காக மூல நிதித் தரவுகளிலிருந்து பயனுள்ள நுண்ணறிவுகளைப் பெறுவது உள்ளிட்ட எல்லாவிதச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களையும் அந்த நிபுணர்கள் கற்பர்.
அத்தகைய பயிற்சிபெறும் தொழில்நுட்பம் சாராத நிபுணர்களில் முதல் குழுவினராக அவர்கள் இருப்பர்.
2029ஆம் ஆண்டுக்குள் 100,000 ஊழியர்கள் தங்கள் வேலையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தன்னம்பிக்கை பெற தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சியின்கீழ் அந்தப் பயிற்சி அமைகிறது.
‘ஏஎல்எக்ஸ்அக்கவுன்டன்சி’ (AIxAccountancy) எனப்படும் அந்த இலவசப் பயிற்சித் திட்டம் இரு கட்டங்களாக நடத்தப்படும்.
பயிற்சியில் பங்கேற்போர் தொடக்கத்தில் சேட்ஜிபிடி, கோபைலட் போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தி அடித்தளத்தை அமைத்துக்கொள்வர் எனத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் சிங்கப்பூர்ப் பட்டயக் கணக்காளர் பயிலகமும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
செயற்கை நுண்ணறிவுத் திறன்மிக்க ஏறத்தாழ 100,000 ஊழியர்களை உருவாக்கும் இலக்குடன் கடந்த மார்ச் மாதம் தேசியச் செயற்கை நுண்ணறிவுப் பயன்விளைவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தின்கீழ், செயற்கை நுண்ணறிவுத் திறன் படிப்புகளை உருவாக்க தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்துள்ள பல தொழில்முறை அமைப்புகளில் தேசியக் கணக்கியல் அமைப்பும் ஒன்றாகும்.
கணக்கியல், நிதி, தணிக்கை, வரிவிதிப்பு மற்றும் பிற தொடர்புடைய துறைகளில் பணியாற்றுவோருக்குத் தங்கள் பணிகளில் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்துச் சொல்லித்தரப்படும்.
மோசடியைக் கண்டறிதல், வரிக் கணக்கீட்டிற்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உருவாக்குதல், தனிப்பயனாக்கப்பட்ட கணக்கியல் உரையாடல் மென்பொருள்களை உருவாக்குதல் ஆகியனவும் அந்தப் பயிற்சியில் அடங்கும்.
மேலும், வரவு செலவுத் திட்டமிடல், முன்கணித்தல், வர்த்தகப் பகுப்பாய்வு போன்றவற்றுக்குச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்தும் அவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவுத் துறையில் மிக வேகமாக நிகழ்ந்து வரும் மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள கணக்காளர்களுக்கு உதவுவதில் இந்தப் பயிற்சித் திட்டம் முக்கியப் பங்காற்றுவதாக நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற சிங்கப்பூர்ப் பட்டயக் கணக்காளர் கல்விக்கழகத்தின் வருடாந்தர விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

