ஆறு ஆண்டுகளாக டாக்சி ஓட்டுநராகப் பணியாற்றி வரும் புத்ரி அஸியெல்லா என்பவர், கடந்த நவம்பரில் தனது வேலை ஒப்பந்தம் முடிவடைந்ததும் அப்பணியிலிருந்து விலகி, கேக்குகள், குக்கீகள், ரோல்கள் மற்றும் பிரவுனிகளைத் தயாரிப்பதில் தமது முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிக்டாக் மூலம் தமது தயாரிப்புகளை விற்கத் தொடங்கிய அவர், அதற்கென இணையத்தளம் ஒன்றையும் உணவுப் பட்டியலையும் உருவாக்கி தமது விற்பனையை விரிவுபடுத்த விரும்புகிறார்.
ஆனால், தொழில்நுட்பத் திறன் இல்லாததால் அத்தகைய பணிகளைச் செய்வது அவருக்குச் சவாலான ஒன்றாகத் தோன்றுகிறது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அத்தகைய தடைகள் சிலவற்றை அவரால் கடக்கமுடியும்.
கிராப், ஓப்பன்ஏஐ ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கிய, செயற்கை நுண்ணறிவு திறன்களைக் கற்றுக்கொடுக்கும் ‘கோ ஃபார்வர்ட் வித் ஏஐ’ என்னும் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் சிங்கப்பூரின் முதல் கிராப் ஓட்டுநர்கள், விநியோக ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களில் அந்தப் பெண்மணியும் ஒருவர்.
அந்த ஈராண்டு இலவசப் பயிற்சித் திட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 23) சிங்கப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் பயிலரங்கில் கிட்டத்தட்ட 50 பெண் ஓட்டுநர்கள் மற்றும் விநியோக ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். அந்தப் பயிலரங்கு தெம்பனிசில் உள்ள கிராப் ஓட்டுநர் மையத்தில் நடத்தப்பட்டது.
இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து மற்றும் வியட்னாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள 30,000க்கும் மேற்பட்ட தற்சார்பு ஊழியர்கள் மற்றும் வர்த்தகர்களை உள்ளடக்கும் வகையில் அந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
