இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) எழுதும் மாணவர்களுக்கு 12,000 இலவச காலை உணவுப் பொட்டலங்களை ஃபேர்பிரைஸ் குழுமம் வழங்கவுள்ளது.
தீவு முழுவதும் உள்ள 131 சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் கடைகளில் செப்டம்பர் 20, 21ஆம் தேதிகளில் அந்தக் காலை உணவுப் பொட்டலங்களை தான் விநியோகிக்க இருப்பதாக புதன்கிழமை (செப்டம்பர் 11) ஃபேர்பிரைஸ் தெரிவித்தது.
“ஒவ்வொரு பொட்டலமும் $20க்குமேல் மதிப்புடையது. அதில் பால், முழுதானிய ரொட்டி, டப்பியில் அடைக்கப்பட்ட டியுனா உள்ளிட்ட உணவு வகைகள் இருக்கும். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அவை உதவியாக இருக்கும்,” என்று ஃபேர்பிரைஸ் கூறியது.
அந்த உணவுப் பொட்டலங்களைப் பெற விரும்புவோர் தங்கள் மாணவர் அட்டைகளைத் தகுதிபெறும் கடைகளில் சரிபார்ப்புக்கு வழங்கலாம். தகுதிபெறும் கடைகள் குறித்த விவரங்களை ஃபேர்பிரைஸ் குழுமத்தின் இணையப்பக்கத்தில் காணலாம்.
ஒரு மாணவருக்கு ஓர் உணவுப் பொட்டலம் என்ற அளவில், முதலில் வருவோருக்கு முதலில் சேவை எனும் அடிப்படையில் அவை வழங்கப்படும்.
பிஎஸ்எல்இ, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும்.