மரின் பரேட் வட்டாரத்தில் இலவசமாக இயங்கிவந்த பேருந்து சேவை நவம்பர் 20ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று அதனை இயக்கிவந்த அடித்தள அமைப்புகள் இந்த வாரம் (அக்டோபர் 13) அறிவித்திருந்தன. அச்செய்தி அங்கு பல முதியோருக்கு கவலையை அளித்துள்ளது.
அந்தச் சேவை, ஓர் ஆண்டு சோதனை முயற்சியாக கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய மரின் பரேட் குழுத்தொகுதி, மெக்பர்சன் மற்றும் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியின் குடியிருப்பாளர்களுக்கென தொடங்கப்பட்டது. அண்மையில் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மெக்பர்சன் தொகுதி, புதிய மரின் பரேட்- பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுவிட்டது.
அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து குடியிருப்பாளர்களுடன் தொண்டூழியர்கள் தொடர்பில் இருப்பதாக அந்தக் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான டின் பெய் லிங் தெரிவித்தார். சேவை நிறுத்தத்தால் பாதிப்படைந்தோருக்கு அவர்கள் உதவிகள் வழங்குவர் எனவும் அவர் கூறினார். இது ஒரு நல்ல சோதனை முயற்சி என அவர் கருத்துரைத்தார்.
மிகவும் குறுகிய காலமே அந்த இலவசப் பேருந்து சேவை இயங்கியது என்று முதியோர் குறைபட்டுக்கொண்டனர்.
இலவச பேருந்து சேவை தொடங்கியபோது, கலாசார சமூக, இளையர் துறையின் துணை அமைச்சராக இருந்த ஆல்வின் டான், சோதனை முயற்சிக்கு ஏறத்தாழ $1 மில்லியன் செயல்பாட்டுத் தொகையாகத் தேவைப்பட்டது என்று தெரிவித்திருந்தார். தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் $200,000 மானியத்தை வழங்கியதோடு, எஞ்சிய தொகை நன்கொடைகள் வழியாகப் பெறப்பட்டதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பலரின் கருத்துகளும் நடைமுறை செயல்பாடுகளும் பரிசீலிக்கப்பட்டு, அடித்தள அமைப்புகள் மதிப்பாய்வு ஒன்றை மேற்கொண்டன. அதன் பிறகே திட்டத்தைக் கைவிடும் முடிவு எடுக்கப்பட்டது என ஃபேஸ்புக் பதிவில் அடித்தள அமைப்புகள் காரணங்களை வெளியிட்டுள்ளன.
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் போக்குவரத்து தொடர்பான குறிப்பிட்ட செயல்திட்டங்களை அந்தத் தொகுதியில் ஆராய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் டின் பெய் லிங் கூறினார்.