லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் மீடியாகார்ப் ஒலி 968 வானொலி நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்யும் எட்டு வார இலவச உணவு விநியோக நிகழ்ச்சி கடந்த மூன்று வாரங்களாக வியாழக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இதன்கீழ், லிட்டில் இந்தியாவில் அடுத்த ஐந்து வியாழக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை (அல்லது உணவுப் பொட்டலங்கள் தீரும்வரை) இலவச உணவுப் பொட்டலங்களைப் பெறலாம்.
கேம்பல் லேனில் இந்திய மரபுடைமை நிலையத்தின் அருகே இந்த உணவு விநியோகம் நடைபெறுகிறது. மழை பெய்தால் தேக்கா பிளேசுக்கு விநியோகம் இடமாறும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் 400 முதல் 500 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.
முதல் மூன்று வாரங்களில் பிரியாணி வழங்கப்பட்டது. முதல் வாரம் பிரியாணியுடன் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இந்த வாரமும் கோழி பிரியாணியை மக்கள் எதிர்பார்க்கலாம். கடைசி நான்கு வாரங்களில் இதர உணவுவகைகளையும் சுவைக்கலாம்.
ஒவ்வொரு வாரமும் ஓர் உணவு நிறுவனம் இந்த விநியோகத்திற்கு ஆதரவளிக்கிறது.
அவ்வகையில், மார்ச் 20ஆம் தேதி நடந்த விநியோகத்திற்கு லிஷா செயற்குழு உறுப்பினர்களும் ஜூனியர் குப்பண்ணா உணவகமும் ஆதரவளித்தன.
மழை தூறியபோதும் பலரும் கோழி பிரியாணியைக் காத்திருந்து வாங்கிச் சென்றனர். ஒருவர் மாலை 4 மணியிலிருந்தே வரிசையில் நின்றதாகக் கூறினார். விநியோகம் தொடங்கிய அரை மணி நேரத்திற்குள் உணவுப் பொட்டலங்கள் தீர்ந்துவிட்டன.
தொடர்புடைய செய்திகள்
ஒலி 968 ‘இரவினில் ஆட்டம்’ நிகழ்ச்சிப் படைப்பாளர்கள் காதர், ஜெய்னேஷ் இருவரும் லிஷா உறுப்பினர்களுடன் இணைந்து பிரியாணியை மக்களுக்கு விநியோகம் செய்தனர்.
“இது ஒரு சமூக முயற்சி. வயதானவர்கள், பள்ளி முடிந்துவரும் மாணவர்கள், முதியோர், இல்லத்தரசிகள், வெளிநாட்டு ஊழியர்கள், சுற்றுப்பயணிகள் எனப் பல தரப்பினரும் பிரியாணியைப் பெற்று மகிழ்ந்தனர்,” என்றார் மீடியாகார்ப் ஒலி 968 இயக்குநர் ஆனந்தன் கருப்பையா.
“இம்முயற்சியை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம். உணவளிப்பது எப்போதும் நற்காரியமே,” என்றார் ‘ஸ்ரீ சாய்ஸ் டெய்லரிங்’ உரிமையாளர் ராணி மங்கம்மா, 55.
“எங்கள் ஊழியர்களுக்கும் உணவை வாங்கிச் சென்றோம்,” என்றார் ‘பவானி காஸ்டியூம்ஸ்’ உரிமையாளர் வசந்தா சுதர்சனன், 65.