ஜகார்த்தா: இலவச உணவுத் திட்டம் இந்தோனீசியாவின் பொருளியல் வளர்ச்சியைத் வேகப்படுத்த உதவுவதாக அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தெரிவித்துள்ளார்.
நிதி நிர்வாகம் குறித்த கவலைகளால், இந்தோனீசியாவின் கடன் தரமதிப்பீட்டை (Credit rating) ‘மூடிஸ்’ நிறுவனம் குறைத்ததை அடுத்து திரு பிரபோவோ அவ்வாறு கூறினார்.
தலைநகர் ஜகார்த்தாவில் பேசிய திரு பிரபோவோ, நாட்டின் வளர்ச்சிக்கு இந்த உணவுத் திட்டம் அடித்தளம் அமைப்பதாகக் குறிப்பிட்டார். அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில், அரசாங்கச் செலவினக் கொள்கைகள் குறித்து அவரது அமைச்சரவையினர் நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கும் பேராளர்களுக்கும் விளக்கமளித்தனர்.
“உணவுத் திட்டத்தால் கிராமங்களிலும் மாவட்டங்களிலும் பொருளியல் நடவடிக்கை பெருகியுள்ளது. எனவே, நமது பொருளியல் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்,” என்று திரு பிரபோவோ கூறினார்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் முயற்சியில் இந்தோனீசியா போராடும் நேரத்தில் திரு பிரபோவோ இதனைக் கூறியுள்ளார்.
தென்கிழக்கு ஆசியாவின் ஆகப்பெரிய பொருளியலாகத் திகழும் இந்தோனீசியாவின் நிதிச்சந்தையில் வெளிப்படைத்தன்மை குறைவாக இருப்பதாக அமெரிக்க நிதி நிறுவனமான ‘எம்எஸ்சிஐ’ (MSCI) எச்சரித்ததையடுத்து, முதலீட்டாளர்களின் அவநம்பிக்கையைப் பிரதிபலிக்கும் விதமாகக் கடந்த இரண்டு நாள்களாகப் பெருமளவில் பங்குகள் விற்கப்பட்டன.
இதற்கிடையே, இந்தோனீசியாவின் கடன் தரமதிப்பீட்டு நிலையை ‘எதிர்மறை’ என்ற நிலைக்கு மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளது.
ஏறக்குறைய 60.2 மில்லியன் பேர் இலவச உணவுத் திட்டத்தால் பயனடைவதாகக் குறிப்பிட்ட திரு பிரபோவோ, அவர்களில் மாணவர்களும் கர்ப்பிணிகளும் அடங்குவர் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் 1.5 மில்லியன் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மற்ற அரசாங்கத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதில், பயன்படுத்தப்படாமல் உள்ள எஞ்சிய நிதிதான் இந்த உணவுத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படுவதாகத் திரு பிரபோவோ கூறினார்.

