2026 பிற்பாதியிலிருந்து சிங்கப்பூரர்களுக்கு இலவச ‘ஏஐ’ சந்தா

2026 பிற்பாதியிலிருந்து சிங்கப்பூரர்களுக்கு இலவச ‘ஏஐ’ சந்தா

2 mins read
09fd7ef9-6aaa-4ba5-bfd4-b5053051d4db
சிங்கப்பூரர்கள் செயற்கை நுண்ணறிவை நம்பிக்கையோடு பயன்படுத்துவதற்கு உதவ இலவச சந்தா சலுகை வழங்கப்படவுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், இவ்வாண்டின் இரண்டாம் பாதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு ‘பிரிமியம்’ செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை இலவசமாகப் பெறுவார்கள்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) இடம்பெற்ற மனிதவள அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது டாக்டர் டான் சீ லெங் இதனை அறிவித்தார்.

இந்தச் சலுகை, சிங்கப்பூரர்கள் செயற்கை நுண்ணறிவை நம்பிக்கையோடு பயன்படுத்த உதவுவதற்கான திட்டங்களின் ஒரு பகுதியாகும்.

இலவச ஏஐ சந்தாக்கள் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் நடைமுறைப்படுத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படும் ஏஐ பயிற்சி வகுப்புகள், கருவிகள் ஆகியவை தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் மனிதவள அமைச்சர் டான்.

‘கூகல்’, ‘மேனஸ்’, மைக்ரோசாஃப்ட்’, ‘ஒப்பன்ஏஐ’ போன்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டாக்டர் டான் கூறினார்.

ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக்கூடிய ஊழியரணியை உருவாக்குவது சிங்கப்பூரின் முன்னுரிமைகளில் ஒன்று என அவர் சொன்னார்.

அதிக நிபுணத்துவம் இல்லாதது, குறைவான ஏஐ பயன்பாடு போன்ற காரணங்களால் ஐந்தில் மூன்று தென்கிழக்காசிய நிறுவனங்களால் அந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் இன்னும் அர்த்தமுள்ள நிதி ஆதாயங்களைக் காணமுடியவில்லை என்று ‘மெக்கின்சி’, பொருளியல் வளர்ச்சிக் கழகம், ‘டெக் இன் ஏசியா’ வெளியிட்ட அண்மை அறிக்கை காட்டியது.

“இந்த இடைவெளி தொடர்ந்து நீடிக்க நாம் இடமளிக்கக்கூடாது,” என்று கூறிய டாக்டர் டான், சிங்கப்பூர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

வயது, வருமானம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவரையும் உள்ளடக்கியதாக ஏஐ இருக்கவேண்டும் என்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர் டெரன்ஸ் ஹோ கூறிய கருத்தை டாக்டர் டான் ஒப்புக்கொண்டார்.

மூத்த ஊழியர்கள், குறைந்த வருமானச் சிங்கப்பூரர்கள் போன்றவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் ‘பிரிமியம்’ செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வழங்குவது குறித்து மனிதவள அமைச்சு சிந்திக்கவேண்டும் என்று திரு ஹோ கூறியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த டாக்டர் டான், “அந்தத் திட்டம் 25 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் கிடைக்கப்பெறும்,” என்று கூறினார்.

“அதையும் தாண்டி, மேலும் மூத்த, குறைந்த வருமான ஊழியர்களை நமது ஏஐ பயணத்தில் சேர்த்துக்கொள்வதற்கான வழிகளை நாம் தொடர்ந்து ஆராய்வோம்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்