கம்ஃபர்ட்டெல்குரோவின் தானியங்கி வாகனத்தில் இலவசப் பயணம்

கம்ஃபர்ட்டெல்குரோவின் தானியங்கி வாகனத்தில் இலவசப் பயணம்

2 mins read
4d3dfc44-613d-471c-9c0a-4d31e93e2055
கம்ஃபர்ட்டெல்குரோ வாகனத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனத்தின் (சிடிஜி) ஓட்டுநர் இல்லாமல் சுயமாக இயங்கும் வாகனத்தில் பொங்கோல்வாசிகளும் பொதுமக்களும் ஜூன் 22ஆம் தேதி முதல் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனமும் நிலப் போக்குவரத்து ஆணையமும்(எல்டிஏ) இணைந்து வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளன.

இந்த இலவசச் சேவை நாள்தோறும் வழங்கப்படும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் குழுக்கள், குடும்பங்கள் மற்றும் உதவி தேவைப்படுவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தானியங்கி வாகனத்தின் பயணப் பாதை சுமார் 25 நிமிடங்கள் வரை இருக்கும். பொங்கோல் நார்த்ஷோர் டிரைவ் புளோக் 420A, பொங்கோல் கோஸ்ட் மால், ஒன் பொங்கோல் (சம் கீ எல்ஆர்டி நிலையம்) ஆகியவற்றின் வழியாக வாகனம் செல்லும்.

இதற்கு அடுத்ததாக ஜூலை மாதத்தில் ஐம்பது நிமிடங்கள் கொண்ட நீண்டதொரு பயணப் பாதையை அறிமுகப்படுத்த கம்ஃபர்ட்டெல்குரோ திட்டமிட்டுள்ளது.

இச்சேவையைப் பயன்படுத்த விரும்புவோர் https://zig.sg/driverless என்ற இணையப்பக்கம் வழியாக முன்கூட்டியே பதிவு செய்வது அவசியமாகும். கம்ஃபர்ட்டெல்குரோவின் ஐந்து இருக்கைகளைக் கொண்ட தானியங்கி வாகனங்கள், சீனாவின் ‘Pony.ai’ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. தற்போதைய விதிமுறைகளின்படி அவசர காலங்களில் வாகனத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் எப்போதும் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து இதில் பயணம் செய்ய சிலருக்கு மட்டுமே கம்ஃபர்ட்டெல்குரோ அழைப்பு விடுத்திருந்தது. அதன் ஒரு பகுதியாக பொங்கோல் குடியிருப்பாளர்களும் அடித்தளத் தலைவர்கள் உட்பட 1,500க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்துள்ளனர்.

தற்போது பொதுமக்களும் அதில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

சிங்கப்பூரின் போக்குவரத்து கட்டமைப்பில் தானியங்கி வாகனங்களை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தின் பரந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கம்ஃபர்ட்டெல்குரோவின் சேவை அறிமுகம் காண்கிறது.

பொங்கோலில் இச்சேவையை வழங்க ஒப்புதல் பெற்றுள்ள இரண்டு நிறுவனங்களில் கம்ஃபர்ட்டெல்குரோவும் ஒன்று.

மற்றொரு நிறுவனமான ‘கிராப்’ கடந்த ஜனவரி மாதம் பொங்கோலில் தானியங்கி வாகனத்தின் முதற்கட்ட சோதனைகளை நடத்தி ஏப்ரல் 1 முதல் பொதுமக்களுக்கு இலவசச் சேவையை வழங்கி வருகிறது.

கடந்த ஜூன் 12ஆம் தேதி நிலவரப்படி கிராப் நிறுவனம் 5,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு இச்சேவையை வழங்கியுள்ளது. இதில், 60,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை கிராப் வாகனங்கள் கடந்து வந்துள்ளன. கிராப் நிறுவனம், எப்போது கட்டணத்துடன்கூடிய சேவையை அறிமுகப்படுத்தும் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அது, 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்படலாம் என முன்பு வெளியானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கட்டணச் சேவை தொடங்கும்போது ஒரு பயணத்திற்கு 4 வெள்ளியை கட்டணமாக வசூலிக்க கிராப் திட்டமிட்டுள்ளது.

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தனது சேவைக்கான கட்டணத்தை இன்னும் இறுதி செய்யவில்லை.

குறிப்புச் சொற்கள்