எஸ்எம்ஆர்டி நிறுவனம், மூன்று ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு இலவசமாகத் தோள்பட்டையைப் பிடித்துவிடும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், ரயில் பயணிகள் இனி தங்கள் பயணங்களுக்கு மத்தியில் தோள்பட்டையைப் பிடித்துவிடும் 10 நிமிடச் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் முதல்முறையாக இத்தகைய முயற்சி தொடங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 24) எஸ்எம்ஆர்டி தெரிவித்தது. பார்வைக் குறைபாடு உடையோருக்கான சங்கத்தைச் சேர்ந்த உடற்பிடிப்பாளர்களுடன் இணைந்து இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அது கூறியது.
இந்தச் சேவை, வெள்ளிக்கிழமை கென்ட் ரிட்ஜ் நிலையத்தில் தொடங்கி, நவம்பர் 17ஆம் தேதி தஞ்சோங் பகார் நிலையத்திலும் டிசம்பர் 1ஆம் தேதி ஷென்டன் வே நிலையத்திலும் விரிவுபடுத்தப்படும்.
ஒவ்வோர் அமர்விலும் தோள்பட்டையைப் பிடித்துவிடுவதற்கான 38 இடங்கள் கிடைக்கும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயணிகள் இச்சேவைக்குப் பதிவுசெய்ய வேண்டும்.
இந்த முயற்சி, பயணிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒரு வழியாகும் என்று எஸ்எம்ஆர்டி டிரெய்ன்ஸ் தலைவர் லாம் ஷியாவ் காய் கூறினார். அத்துடன், இந்தச் சேவை பார்வைக் குறைபாடுள்ள உடற்பிடிப்பாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் என்றும் எஸ்எம்ஆர்டி நம்புகிறது.
பார்வைக் குறைபாடு உடையோருக்கான சங்கத்தின் செயல் இயக்குநர் சேமியல் சூ, பார்வைக் குறைபாடுள்ள உடற்பிடிப்பாளர்களின் திறன்களையும் தொழில்முறையைச் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவதில் தமது அமைப்பு மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.
இதற்கிடையே, வட்டப் பாதையில் கென்ட் ரிட்ஜ், லேப்ரடோர் பார்க், ஒன் நார்த், தை செங் ஆகிய நான்கு எம்ஆர்டி நிலையங்களுக்கு எஸ்எம்ஆர்டி தனது சுகாதாரக் கூடங்களை வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தியது.
ரத்த அழுத்தப் பரிசோதனைக் கருவிகள், உடல் எடைக் குறியீட்டைச் சரிபார்க்கும் கருவிகள் போன்ற அடிப்படைச் சுகாதாரப் பரிசோதனைக் கருவிகளைப் பயணிகள் அணுகும் வசதியை இவை வழங்குகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்த முயற்சி 2024 ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்டதிலிருந்து தஞ்சோங் பகார், புரோமனேட் நிலையங்களில் ஏற்கெனவே உள்ள எஸ்எம்ஆர்டியின் சுகாதாரக் கூடங்கள் 200,000க்கும் மேற்பட்ட ரத்த அழுத்த அளவீடுகளைப் பதிவுசெய்துள்ளன.

